நாள் : 20.09.2020
தலைப்பு : இது தாவீதின் கொள்ளை
போதகர் : முனைவர். இராபர்ட் சைமன்
அமலேக்கியர் பிடித்துக் கொண்டு போன எல்லாவற்றையும், இழந்து போன எல்லாவற்றையும், தாவீது திருப்பிக் கொண்டான். நெருக்கப்படும்போது, கலக்கம் அடையும்போது, தாவீது கர்த்தருக்குள் நிலையாய் இருந்தான்.
பரிசுத்த வேதாகமத்தில் தாவீதினுடைய வாழ்க்கை வரலாறு பதிவு செய்யப்பட்டது போல , பழைய ஏற்பாட்டில் தாவீதுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை போல, வேறு எந்த தனி மனிதனுக்கும் ஒதுக்கப்படவில்லை. தாவீதை குறித்து, வேத பண்டிதர்கள் மத்தியில் சில கருத்துக்கள் வேறு பட்டாலும், வரிசை தொடர் மாறுபடவில்லை. ஒரு திறந்த புத்தகம் போல தாவீதின் வாழ்க்கை வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாவீதின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்று விவிலியத்தில் இயேசு கிறிஸ்துவை குறிப்பிடுகிறார்கள்.
1 சாமுவேல் 30 ஆம் அதிகாரத்தில் உள்ள வசனங்களை பார்க்கும் பொழுது தாவீது தன்னை எவ்வாறு கர்த்தருக்குள் காத்துக் கொண்டார் என்பதை அறிய முடியும்
ராஜாவிற்கு மனநிலை பாதிக்கப்படும்போது ஒரு கீதம் வாசிக்கும் வேலைக்காக, ராஜாவிற்கு கீதம் வாசிப்பவராக 15 வயதிற்குள் பணி அமர்த்தப்பட்ட தாவீது படிப்படியாக ராஜா என்னும் அந்தஸ்தை அடைகிறார். இதனால் கலக்கமடைந்த சவுல், தாவீதை கொலை செய்ய முயற்சிக்கிறார். இதிலிருந்து தப்பிக்க, தாவீது, எந்த கோலியாத்தை, பெலிஸ் தியனை தோற்கடித்தாரோ, அதே பெலிஸ்தியரின் நாட்டிற்கு தன்னை காத்துக்கொள்ள தப்பிச்சென்றார். அதே இடத்தில், அங்கு ஒரு படையை சேர்த்து, மீண்டுமாய் தனது தேசத்திற்கு வருகிறார்.
எப்படி இது சாத்தியமாயிற்று?
தன்னை பின்தொடர்ந்து வந்த விரோதிகளிடமிருந்து தப்பி, தன்னையும் காத்து, தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்களையும் காத்து, வெற்றி வாகை சூடி, தான் கொள்ளையடித்த பொருள்களை, தன்னை பின்தொடர்ந்தவருக்கும், பெலவீனத்தால் பின்தங்கியவருக்கும், பகிர்ந்து கொடுத்து தேவ ஆசீர்வாதத்தை பகிர்ந்து கொண்டார்.
தாவீதின் வெற்றிக்கான 7 காரியங்கள்
- கர்த்தருக்குள் எப்பொழுதும் தாவீது தன்னை திடப்படுத்திக் கொண்டார்.
- தாவீதுடைய கண்கள் எப்பொழுதும் தேவனையே நோக்கி பார்த்துக்கொண்டு இருந்தது .
- மனிதனுடைய ஆலோசனைகளை அல்ல, தேவனுடைய ஆலோசனைகளுக்கு காத்திருந்தார்.
- எந்த சூழலிலும் கர்த்தரை உயர்த்தி பழகிக் கொண்டார்.
- தன் காலத்திலேயே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியம் செய்தார்.
- எல்லா சூழலிலும் கர்த்தரையே மகிமைபடுத்தினார்.
நாமும் நம்முடைய வாழ்க்கையில் தாவீதை போல, எல்லா சூழலிலும், கர்த்தருக்குள் திடப்படுத்தி, தேவனையே நோக்கி பார்த்து, அவரையே உயர்த்தி அவரை மகிமைப்படுத்தும் பொழுது, நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். தாவீதை ஆசீர்வதித்த தேவன், நம்மையும் ஆசீர்வதிக்க சித்தம் கொண்டவராய் இருக்கிறார்.
இது தாவீதின் கொள்ளை!
இது தேவனின் கொள்ளை!!
வெற்றி பெற விரும்புவோருக்கு
இது வகுத்திடும் ஒரு எல்லை …!