Karthave Ummudaya Valathukaram | கர்த்தாவே உம்முடைய வலதுகரம் | O Lord Thy Right Hand
| Pr. Robert Simon | முனைவர். இராபர்ட் சைமன் | தமிழ் செய்தி | Tamil Message | Pr. Robert Simon
Message Date / தேவ செய்தி நாள் : 15 March 2020
Message Title / செய்தி தலைப்பு: Karthave Ummudaya Valathukaram | கர்த்தாவே உம்முடைய வலதுகரம் | O Lord Thy Right Hand
Message By / செய்தி : போதகர் முனைவர். இராபர்ட் சைமன் / Pastor. Robert Simon
கர்த்தர் சர்வ வல்லமை உள்ளவர். கர்த்தருடைய சர்வ வல்லமையின் உச்சம், ஒட்டுமொத்த வெளிப்பாடும் அவருடைய வலது கரத்தில் தான் இருக்கிறது. ஒட்டுமொத்தமான வல்லமை வலது கரத்தில் தான் இருக்கிறது. கர்த்தரின் ஒட்டுமொத்தமான வல்லமையை தியானிப்பது தான் அவருடைய வலது கை. இடது கைக்கு வல்லமை இல்லையா என்றால் வல்லமை இருக்கிறது. கர்த்தர் நமக்காக கிரியை செய்கிற வல்லமையின் முழு வெளிப்பாடும் அவருடைய வலதுகை என்று அறியப்படுகிறது.
முழு வல்லமையின் வெளிப்பாடு எப்போது?
யாத்திராகமம் 15:6 – ல் காணலாம்
“கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது”.
சங்கீதம் 89:13 இவ்வாறு கூறுகிறது
“உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது”.
எல்லாவற்றிற்கும் மேலாக வல்லமையுள்ள தேவன் தந்த, தெய்வ வல்லமையின் உன்னதமான வெளிப்பாடு, அவருடைய வலது கரம் .
சங்கீதம் 118 :15,16 –ல் பார்க்கலாம்
“15. நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ் செய்யும்.
16. கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.”
அவருடைய வலது கரம் உயர்ந்திருக்கிறது கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். அதற்கு மேலே எந்த சக்தியும் கிடையாது. அவருடைய வலது கரம் உயர்ந்திருக்கிறது.
சங்கீத புத்தகத்தில் இருந்து ஐந்து காரியங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
- உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும். சங்கீதம் 138 :7 இவ்வாறு கூறுகிறது
“நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்”.
கொடூரமான சத்துருவிற்கு முன்னால் துன்பத்தின் நடுவில் நான் நடந்து கொண்டிருக்கிறேன். இப்போது நான் என் தேவனை நோக்கி ஜெபிக்கிறேன். என்னை காத்துக் கொள்ளும் கர்த்தாவே. எரியும் அக்கினி கன்மலையை உருக்குமாப்போலவும், வெண்ணெயை உருக்குமாப்போலவும், பாறையை உடைக்க அக்கினியை போலவும், என்னுடைய சத்துருவின் கைக்கு என்னை விலக்கி காத்துக் கொள்ளும் கர்த்தாவே என்று ஜெபியுங்கள். கர்த்தருடைய வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
ஒரு சிலர் துன்பத்தின் நடுவே நடந்தாலும், அவர்களுடைய கோபத்திற்கு முன்பாக வார்த்தைகளுக்கு முன்பாக என்னால் நிற்க முடியவில்லை. நீர் உம்முடைய கையை நீட்டும், உம்முடைய வலதுகரம் என்னை காப்பாற்றட்டும். இன்றைக்கு எங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நீர் உம்முடைய கையை நீட்டும் , உம்முடைய வலதுகரம் காப்பாற்றட்டும் என கேளுங்கள்.
கர்த்தர் தனது வலது கரத்தை நீட்டி இரட்சிப்பார்.
கர்த்தர் யாரை இரட்சிக்கிறார்?
சங்கீதம் 20 :6 இவ்வாறு கூறுகிறது
“கர்த்தர் தாம் அபிஷேகம் பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார்”.
கர்த்தர் தான் அபிஷேகம் பண்ணினவர்களை இரட்சிக்கிறார். அபிஷேகம் பண்ணப்பட்டவருடைய ஜெபத்தை நான் கேட்டேன் என்று கர்த்தர் கூறுகிறார். நீ விடும் கண்ணீரை உனது உறவுகள் காணவில்லை. நான் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மகளே, என் சமூகத்தில் நீ விட்ட கண்ணீரை கணக்கு வைத்து இருக்கிறேன், என்றும் இந்த துன்பத்தின் நடுவில் இருந்து உன்னை எனது வலது கரம் ரட்சிக்கும். என்றும் ஆண்டவர் சொல்கிறார்.
சங்கீதம் 17 : 7 இவ்வாறு கூறுகிறது
“உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்”.
உம்மிடம் அபிஷேகம் பெற்றவர்களை மட்டுமல்ல, உம்மை நம்பி இருப்பவர்களையும் நீர் இரட்சிக்கிறீர். உம்மை நம்பியிருக்கிறவர்களுக்கு விரோதமாக எழும்புகிறார்கள். அவர்களுக்கு எதிராக நிற்க பலனில்லை. ஆண்டவரே! உமது வலது கரத்தினால் தப்புவித்து, உமது அதிசயமான கிருபையை விளங்க பண்ணும். இந்த சூழ்நிலையில் ஒரு விடுதலை உண்டா என்பதை அறிந்து கொள்ள, உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கும் பண்ணும் என்று கர்த்தரிடத்தில் ஜெபியுங்கள்.
சங்கீதம் 60 :5-ல் பார்க்கலாம்
“உமது பிரியர் விடுவிக்கப்படும்படி, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எனக்குச் செவிகொடுத்தருளும்”.
நாங்கள் உம்முடைய பிரியர். உம்முடைய பிரியர், விடுவிக்கும்படி உமது வலது கரத்தினால் இரட்சித்து செவி கொடுத்தருளும் என்று ஜெபியுங்கள்.
சங்கீதம் 108 :6-ல் பார்க்கலாம்
“உமது பிரியர் விடுவிக்கப்படும்பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும்”.
பாவத்திலிருந்து, சாபத்திலிருந்து மாத்திரமல்ல. துன்பத்திலிருந்து எங்களை காத்தருளும், இரட்சித்தருளும் என்று கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்.
கர்த்தரை அடைக்கலமாய் கொண்டவர்கள் கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணுவார்கள். உங்களுக்கு விரோதமாய் எழும்பி இருக்கிற சத்துருவின் கைகளில் இருந்து கர்த்தர் நிச்சயமாய் உங்களை விடுவிப்பார் கண்டிப்பாக அவரது வலது கரம் செய்யும்.
- கர்த்தருடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்
சங்கீதம் 18 : 35-ல் பார்க்கலாம்
“உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்”.
ஆண்டவரே! நீர் என்னை காப்பாற்றி இரட்சிப்பது மாத்திரமல்ல , உளையான சேற்றில் இருந்து தூக்கி எடுத்து, ஆண்டவரே கன்மலையின் உச்சியிலே, அந்த சீயோனிலே, என்னை கொண்டு நிறுத்துவது வரை தாங்குவதும் நீர்தான். ஆண்டவரே! கடைசி மட்டும் தாங்குவது நீர்தான், உம்முடைய காருணியம்தான். இஸ்ரவேலின் தேவனாகிய உமது செட்டைகளின் கீழ் அடைக்கலம் ஆகும்போது, எனக்கு உம்மாலே பெரிதான நன்மை கிடைக்காமல் போகாது. நீர் என்னை தாங்குகிறீர்.
எதற்காக என்னை தாங்குகிறீர்?
என்னை பெரியவனாகும் படி தாங்குகிறீர்.
இயேசுவின் நாமத்தில் சொல்கிறேன். சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான். ஏற்ற காலத்திலே இதை நான் தீவிரமாய் நடப்பிப்பேன் என்று கர்த்தர் கூறியிருக்கிறார். கண்டிப்பாக கர்த்தர் உங்களை பெரியவனாகுவார். பூமியின் உயர்ந்த ஸ்தானத்திலே எறிவரப் பண்ணுவார். எருசலேமை பூமியிலே புகழ்ச்சியாக்குவார்.
3. உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது .
சங்கீதம் 63 :8 கூறுகிறது
“என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது”.
ஆண்டவரே! நீர் என்றைக்கு என்னை பிடித்துக் கொண்டீரோ , அன்றிலிருந்து உம்மையே பிடித்திருக்கிறேன். அவரைப்பற்றி கொள்ளுகிறவர்களை, அவரது வலது கரம் தாங்கி பிடிக்கும். நீங்கள் அவரை பற்றி கொண்டிருக்கும் போது அவர் கைவிடவே மாட்டார், உன்னை விட்டு விலகவும் மாட்டார்..
சங்கீதம் 139 : 10 கூறுகிறது
“அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்”.
எவ்வளவு நெருக்கமான பாதை இருந்தாலும் அங்கேயும் உமது வலதுகரம் என்னை பிடிக்கும், என்னை நடத்தும், மலை இடுக்குகளில் உமது வலதுகரம் தாங்கும்.
4. உன்னதமானவருடைய வலது கரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்
சங்கீதம் 77 : 10 –கூறுகிறது
“அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலது கரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்”.
பிரியமானவர்களே நம்முடைய வருஷங்கள் எல்லாம் அவர் கையில் இருக்கிறது.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு,
“MY FUTURE IS SAFE IN THE HANDS OF THE LORD THAN IN MY HANDS“.
சங்கீதம் 77 : 14
“அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர்”
ஆண்டவர் கொடுத்த வாக்குத்தத்தம் ஏன் நிறைவேறவில்லை?
வாக்குத்தத்தம் தலைமுறை தலைமுறையாய் ஒழிந்து போகின்றனவா?. பிரியமானவர்களே! போன வாரம் பேசினாரே! விழிப்பிரவு ஆராதனையில் ஜெபிக்கும்போது பேசினாரே! ஆனால் நிறைவேறக் காணோமே! வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஒழிந்து போயிற்றோ! கோபத்தினால் தன் உருக்கமான இரக்கங்களை அடைத்துக் கொண்டார், என்றெல்லாம் நான் நினைத்தேனே, இது என் பலவீனம்.
அவருடைய வலது கரத்தில் உள்ள வருஷங்களை நினைவு கூறுவேன். என் எதிர்காலம் அவர் கையில் இருக்கிறது. நான் இப்போது, அழுது, சோர்ந்து போகமாட்டேன். என்னுடைய, NEXT STEP, கர்த்தரின் வலதுகரம் இருக்கிறது. தேவனுடைய வலது கரத்தில் இருக்கிற வருஷங்களை நினைவு கூறுவேன். அவரை அறியாமல் ஒன்றும் நடக்காது.
சங்கீதம் 77 : 11முதல் 13 வரை உள்ள வசனங்களில் காணலாம்
11. கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;
12. உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.
13. தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?
‘நினைவு கூறுதல்’ என்பது என்னுடைய ஞாபகத்திற்கு கொண்டு வருவேன் நினைவலைகளை கொண்டு வருவேன் என்று பொருள்படும்.
ஆண்டவரே! உம்முடைய சமூகத்திற்கு வருகிறேன்.
சங்கீதம் 77 : 14 கூறுவது போல, , ஆண்டவரே எப்படியாவது உம்முடைய வல்லமையை, அதிசயங்களை விளங்கப் பண்ணும். உம்முடைய வலதுகரம் உயர்ந்திருக்கிறது. ஆண்டவரே! ஒரு ஆட்டு மந்தையை வழிநடத்துவது போல என்னையும், என் குடும்பத்தையும் நடத்தும்.
நாம் பயப்பட வேண்டாம். உம்முடைய ஜனத்தை ஒரு ஆட்டு மந்தையைப் போல் நடத்தினீரே , உம்மை நம்பி வந்திருக்கிறேன், எங்களுக்கு ஒரு சபையை தந்திருக்கிறீர்! ஒரு மேய்ப்பனை தந்திருக்கிறீர்! அன்றைக்கு வனாந்தரத்தில் மோசேயை கொண்டு, அத்தனை லட்சம் மக்களை நீர் நடத்தினீரே! தூதரும் அறியாத மன்னாவினாலே போஷித்தீரே ! கன்மலை தண்ணீரினால் தாகத்தை தீர்த்தீரே ! சத்ருக்கள் மேலே ஜெயம் தந்தீரே ! யோர்தான் இடையே எரிகோ கோட்டையை நீர் விழப்பண்ணினீரே!
அன்றைக்கு மோசேயையும் ஆரோனையும் கொண்டு நடத்தினவர், இன்றைக்கு என்னை நடத்தாமல் விடமாட்டார். நடத்துவீர்! எப்படியோ வனாந்தரத்திலே அதிசயத்தை காண செய்தீர்! என் மனைவியை பிள்ளைகளை விடமாட்டீர்! தாங்குவீர்! எதிர்காலம் முழுவதும் அவர் வலதுகரத்தில் வைத்திருக்கிறார்.
5. உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது
சங்கீதம் 48 : 10 கூறுகிறது
“தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது”.
ஒருவேளை இந்த உலகத்திலே, நியாயம் கிடைக்காமல் போனாலும், அநியாயம் மேற்கொள்வது போல இருக்கலாம். நியாயம் எடுபட்டு போயிற்று என்று சொல்லலாம். பயப்படாமல் இருங்கள். அவருடைய வலது கரம் நியாயத்தால், நீதியால் நிறைந்திருக்கிறது. கண்டிப்பாக நீதியை பட்டப் பகலின் வெளிச்சம் போல, வெளியே வருமட்டுமாய் அவர் கைவிடவே மாட்டார்.
சங்கீதம் 21 : 8 கூறுகிறது
“உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்”.
- நம் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ பேர் நம்மை பகைக்கிறார்கள். நாம் நினைத்து பார்க்க கூடாத அளவிற்கு அவர்கள் நம்மை பகைக்கலாம். என்னை பகைக்கிறார்கள் உண்டு. உங்களை பகைக்கிறவர்கள் உண்டு. உங்களுக்கு விரோதமாக பேசுகிறவர்கள் உண்டு. உங்களை அவதூறாக பேசுகிறவர்கள் உண்டு. சிலவேளை பெரிய MICROSCOPE வைத்து CORONA VIRUS(COVID-19) ஐ கூட கண்டுபிடிக்க முடியும்.
ஆனால் நமக்கு விரோதமாக பேசுகிறவர்களை கண்டுபிடிக்க முடியாது ஆனால் கர்த்தருடைய வலதுகரம் கண்டுபிடிக்கும். அந்த வலதுகரம் நீதி செய்யும்.
பிரியமானவர்களே! வலதுகரம் என்பது அவரது வல்லமையின் உச்சம். அவரது வலதுகரம் என்பது முழு வல்லமையின் வெளிப்பாடு. கண்டிப்பாக அவரது வலது கரம் எட்டிப்பிடிக்கும். அவரது வலது கரம் நீதியினால் நிறைந்திருக்கிறது. அநியாயம் மேற்கொள்ள விடமாட்டார். கண்டிப்பாக பெரிய காரியத்தை நம்முடைய வாழ்க்கையில் செய்வார்.
சங்கீதம் 44 : 3 இவ்வாறு கூறுகிறது
“அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது”.
கர்த்தர் அவர்களுக்கு, எகிப்தில் அடிமைகளாக இருக்கும் போது, ஒரு வாக்குத்தத்தம் கொடுக்கிறார். பாலும், தேனும் ஓடுகிற நாடும் விசாலமான தேசத்தை தருவேன் என வாக்கு கொடுக்கிறார். வாக்கு கொடுத்ததை தேவன் நிறைவேற்றினார்.
உங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின அவருடைய வார்த்தையை, அவரது வலதுகரம் உங்களுக்கு கிடைக்க பண்ணும்.
சங்கீதம் 78 : 54,55 இவ்வாறு கூறுகிறது
54. அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்தப் பர்வதமட்டுக்கும் அழைத்துக்கொண்டுவந்து,
55. அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.
பிரியமானவர்களே! எகிப்திலிருந்து ஜனங்களை நடத்திக் கொண்டு வந்து, வனாந்திரத்தில் அவர்களை காத்து, யோர்தானை கடக்க பண்ணி, எரிகோ கோட்டையை விழப்பண்ணி , ஆய் பட்டணத்தை சுதந்தரிக்க உதவி செய்து, 7 ஜாதிகள், 31 ராஜாக்கள் மேல் ஜெயம் கொடுத்து, அந்த பெரிய தேசத்தை அவர்கள் முன்பாக வைத்து , நூல் போட்டு, தேசத்தை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அவரது வலது கரம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றியது.
நலமும், விசாலமுமான தேசத்திலே, பாலும், தேனும் ஓடுகிற தேசத்திலே, ஐயா ஒரு மந்தையை நடத்துவதுபோல, நடத்திக் கொண்டு எங்களை இளைப்பாற பண்ணினது உமது வலதுகரம். உமது வலதுகரம் என்னை சியோனிலே கொண்டு சேர்க்கிறது வரை தாங்கிப் பிடிக்கிறது. அவரது வலது கரம் என்னுடைய எதிர்காலத்தை பத்திரமாக வைத்திருக்கிறது. அவரது வலது கரம் எனக்காக நீதி செய்கிறது. அவரது வலது கரம் எனக்கு அவர் பண்ணின வாக்குத்தத்தங்களை பெற்றுக் கொள்ள வைக்கிறது. அவரது வலது கரம் எனக்காக உயரட்டும் . அவரது வலது கரம் எனக்காக கிரியை செய்யட்டும் .
கர்த்தருடைய வலது கரம் நமக்காக!
கர்த்தருடைய வலது கரம் நம்மோடு!!