Message Title / தேவ செய்தி தலைப்பு : Lead, Kindly Light! | காரிருளில் என் நேச தீபம்! | Kaarirulil En Nesa Deepame!
Language / தேவ செய்தி மொழி : Tamil | தமிழ்
Message Date / தேவ செய்தி நாள் : 02 May 2021 | 02 மே 2021
Pastor / போதகர் : Pr. Robert Simon / முனைவர் இராபர்ட் சைமன்
Lead, Kindly Light! | காரிருளில் என் நேச தீபம்! | Kaarirulil En Nesa Deepame! | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
நாள் : 02 May 2021.
தலைப்பு : காரிருளில் என் நேச தெய்வம் இயேசு!
போதகர் : முனைவர் இராபர்ட் சைமன்
நேற்றைய தினத்தில் இருளை குறித்து அனேக வசனங்களை நான் தியானித்துக் கொண்டு இருந்தேன். மிகவும் அருமையாக இருந்தது நம்முடைய வாழ்க்கையில் பல சூழ்நிலைகளில் இருள் நம்மை மூடிக்கொள்கிறது.
ஏசாயா 60:2 கூறுகிறது
இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
ஒரு பாடல் உண்டு, “காரிருளில் என் நேச தெய்வம் ஏசு”. இப்பாடலை இயற்றியவர் Henry Newman. வாழ்வின் ஒரு இருளான , நடுக்கடலில் தத்தளித்த போது, இப்பாடலை அவர் எழுதினார்.
வாழ்வில் ஒரு வெளிச்சம் நமக்கு வேண்டும். இருளின் வல்லமை, இருளின் கிரியைகள், இருளின் அதிகாரம், இருளின் அதிபதி, இருளின் பயங்கரம் என்று வேதத்தில் நாம் வாசிக்கிறோம்.
இருளைப் பற்றிய வெளிச்சத்தை குறித்த ஏழு காரியங்களை குறிப்புகளை நாம் பார்க்கலாம்.
- தேவன் இருளை உண்டாக்கினார்.
- இருளிலே தேவன் இருக்கிறார்.
- இருளில் என்ன இருக்கிறது என்று தேவன் அறிந்திருக்கிறார்.
- இருளில் கர்த்தர் என்னோடு பேசுகிறார்.
- என் இருளில் அவர் வெளிச்சத்தை தருகிறார்.
- நான் இருளிலே தேவனோடு கூட நடப்பேன்.
- இருளை என் தேவன் எனக்கு வெளிச்சமாக மாற்றி விடுகிறார்.
1. தேவன் இருளை உண்டாக்கினார்
சிருஷ்டி கர்த்தர் ஒருவர்தான். இருளை அவர் உருவாக்கவில்லை என்றால் யார் உருவாக்க முடியும்? வெளிச்சத்தை எடுத்துவிட்டால் இருள் அங்கே இருக்கும். இருள் எப்போதும் நம்மை சூழ்ந்து இருக்கிறது. எந்த நேரத்தில் எல்லாம் வெளிச்சத்தை தேவன் எடுக்கிறாரோ, அப்போது அங்கே இருள் வந்து விடும். இருளை அனுப்ப தேவன் வெளிச்சத்தை எடுத்தார். எல்லாவற்றையும் வார்த்தையினாலே உண்டாக்கினவரை யாரால் எதிர்க்க முடியும்?
சங்கீதம் 105:28 இவ்வாறு கூறுகிறது
“அவர் இருளை அனுப்பி, அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை”.
வேதத்திலே வெளிச்சம் என்றால், அறிவு, களங்கமின்மை, சுத்த மனம் என்று பொருள். இருள் என்றால் ஒரு காரியத்தை செய்வதற்குரிய ஞானமின்மை, உண்மையான ஆன்மீகமின்மை என்று பொருள்.
2. இருளிலே தேவன் இருக்கிறார் – தேவன் எங்கே இருக்கிறார்?
யாத்திராகமம் 20: 21 இவ்வாறு கூறுகிறது
“ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்”.
இருள் சூழ்ந்த கார்மேகத்தின் மத்தியில் தேவன் இருந்தார். தேவனை மோசே சேர்ந்தான். பூமியை இருளும், ஜனங்களை காரிருளும் மூடும். நம்முடைய வாழ்வில் இருள் சூழ்ந்து இருந்தாலும், பயப்படாதிருங்கள். இருளிலே தேவன் இருக்கிறார்.
2 சாமுவேல் 22:12 இவ்வாறு கூறுகிறது
“ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.”
எனக்குள்ளே இருக்கிற ஆறுதல், நம்பிக்கை இந்த இருளில் தேவன் இருக்கிறார் என்பதாகும்.
3. இருளில் என்ன இருக்கிறது என்று தேவன் அறிந்திருக்கிறார்
1 இராஜாக்கள் 8:12 கூறுகிறது
“அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,
காரிருளில் வாசம் பண்ணுவேன் என்றார். நீதியும், நியாயமும் அவரை சூழ்ந்து கொண்டிருக்கிறது. அவரே இருளை அனுமதிக்கிறார். அவரே இந்த இருளில் நம்முடன் இருக்கிறார் .
தானியேல் 2:22 கூறுகிறது
அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளிலிருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.
இருளில் என்ன இருக்கிறது என்று அவருக்குத் தெரியும். அவரிடத்தில் வெளிச்சம் இருக்கிறது. இருள் சூழ்ந்து இருக்கிறது. படகு நடுக்கடலில் தத்தளிக்கிறது. என்ன நடக்குமோ என்று ஹென்றி நியூமேனுக்கு தெரியாது. ஆனால் தேவனுக்கு தெரியும். நான் இருளிலேயே இருக்கிறேன். இந்த இருளில் தேவன் என்னோடு கூட இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். இந்த அறிவு எனக்கு இருந்தால் இதுவே எனக்கு இருக்கக்கூடிய வெளிச்சம். நெருக்கத்தின் மத்தியில், மரண காரிருளில் இருக்கும் போது, கர்த்தர் நம்மோடு இருக்கிறார்.
மீகா 7:8 இவ்வாறு கூறுகிறது
“என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்”.
என் சத்துருவே நான் இருளிலே உட்கார்ந்தாலும், கர்த்தர் எனக்கு வெளிச்சமாய் இருப்பார்.
4. இருளில் கர்த்தர் என்னோடு பேசுகிறார்
எங்கே இருந்து தேவன் பேசுவார்?
தனியாக இருக்கும் பொழுது தேவன் நம்மோடு கூட பேசுவார். கர்த்தர் நம்மோடு கூட இருக்கும் பொழுது அது தனிமை அல்ல. கர்த்தர் என்னோடு கூட இருக்கிறார் என்பதை நான் அறிவேன் என்றால் அதுவே எனக்குரிய வெளிச்சம். இருட்டில் இருக்கும் அவருக்குள் ஜீவன் இருக்கிறது. அது மனிதருக்கு ஒளியாய் இருக்கிறது. இருளிலேயே அந்த ஒளி பிரகாசிக்கிறது. எங்கே இருந்து இந்த வெளிச்சம் வருகிறது?
5. என் இருளில் அவர் வெளிச்சத்தை தருகிறார்
ஏசாயா 42:16 கூறுகிறது
“ குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன் “.
என்னுடைய வெளிச்சம் என்ன?
காரிருளில் என்னுடைய நேச தீபம் இருளை வெளிச்சமாக்கினார்.
தேவன் உண்டாக்கினார், உண்டாக்குகிறார். இருளில் கர்த்தர் என்னோடு பேசுகிறார். நான் உபத்திரவப்பட்டது நல்லது அதனாலே உம்முடைய பிரமாணங்களை கற்றுக்கொண்டேன் என் இருளில் அவர் வெளிச்சத்தை தருகிறார்.
6. நான் இருளிலே தேவனோடு கூட நடப்பேன்
நான் இருளிலே தேவனோடு கூட நடப்பேன். சிங்கத்தின் வாயில் இருந்தும் சிங்ககெபியில் இருந்தும் தப்புவிக்கிறார்.
7. இருளை என் தேவன் எனக்கு வெளிச்சமாக மாற்றி விடுகிறார்
சங்கீதம் 139: 11 இவ்வாறு கூறுகிறது
“இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும்.”
நாம் பிரமிக்கத்தக்க அதிசயமாய் படைக்கப்பட்டிருக்கிறோம். இருள் சூழ்ந்தலோகத்தில், இருள் சூழ்ந்த நேரத்தில் காரிருளில் என் நேச தீபமே வெளிச்சத்தின் பாதையில் நடத்துகிறார். நாம் கர்த்தருக்குள் இருப்போம் என்றால் நமக்கு இருளும் வெளிச்சமும் ஒன்றுதான்.
இருளை உண்டாக்கியவரும் அவரே!
இருளில் வெளிச்சத்தை உண்டாக்கியவரும் அவரே!
என் இருளில் வெளிச்சமானவரும் அவரே!
என் இருளை வெளிச்சமாக்கியவரும் அவரே!
இந்த அறிவின் வெளிச்சத்தால்,
மரண இருளின் பள்ளத்தாக்கிலே நான் நடந்தாலும்
வாழ்க்கையை வென்றிடுவேனே,
அல்லே…லூ..யா!