Munbu, Pinbu | முன்பு, பின்பு | First, Next | முனைவர். இராபர்ட் சைமன் | தமிழ் தேவ செய்தி | Tamil Message | Pr. Robert Simon

Munbu, Pinbu | முன்பு, பின்பு | First, Next | முனைவர். இராபர்ட் சைமன் | தமிழ் தேவ செய்தி | Tamil Message | Pr. Robert Simon

Message Date / தேவ செய்தி நாள் : 07 June 2020
Message Title / தேவ செய்தி தலைப்பு : முன்பு, பின்பு / First, Next
Message By / தேவ செய்தி போதகர் : முனைவர் இராபர்ட் சைமன் / Pastor Robert Simon

Message Description:

மிக ஒரு எளிமையான ஆழமான பொருட் செறிவு உள்ள பகுதி இயேசு கிறிஸ்து தன்னுடைய முதல் பிரசங்கமான மலைப் பிரசங்கத்தில் தன்னுடைய சீடர்களுக்கு சொன்ன அளப்பரிய உபதேசங்களில் மிக அருமையான உபதேசம், நாம் கர்த்தரை ஆராதிக்க சேரும்போது என்ன செய்ய வேண்டும் என்பதுதான். அதைப்பற்றி இந்த தேவ செய்தியில் காணலாம்.

மத்தேயு 5: 23 ஆம் வசனத்தில் இவ்வாறு பார்க்கிறோம்.

                ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில்,

இயேசு கிறிஸ்து அன்றைக்கு மலைப் பிரசங்கம் செய்யும்போது திரள் கூட்டமான ஜனங்கள் இருக்கிறார்கள். அவருடைய சீடர்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்களை பார்த்து, அவரை பின்பற்றி வருகிற சீடர்களைப் பார்த்து, இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.

மத்தேயு 5: 21 இவ்வாறு கூறுகிறது:

                “கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்”.

பலிபீடத்தினிடத்தில் காணிக்கை செலுத்த வரும்போது முன்னோர்கள் சொன்னார்கள், நம்முடைய யூத மார்க்கத்தில் இப்படி ஒரு வழக்கம் இருக்கிறது, சட்டம் இருக்கிறது,  அவன் கொலை செய்தானா இல்லையா என்று நியாயத்தீர்ப்புக்கு கொண்டு போவார்கள். இதுதான் பொதுவாக நம்முடைய மதத்தினுடைய வழக்கம். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்று  இயேசு கிறிஸ்து ஆரம்பிக்கிறார் பலி செலுத்த பலிபீடத்திற்கு வரும்போது இங்கே ஒரு சமய நடைமுறையை பார்க்கிறோம்.

நம் அனைவருக்கும் ஒரு வாஞ்சை இருக்கிறது. சீக்கிரமாக சபைகள் திறக்க வேண்டும். நாம் அனைவரும் கர்த்தரை ஆராதிக்க வேண்டும் என்ற வாஞ்சை நம் அனைவருக்கும் இருக்கிறது., கிறிஸ்தவர்களுக்கு மாத்திரமல்ல, எல்லா மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட வேண்டும் என்று சொல்லி எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் சொல்லுகிறார்கள். இறைவனை வழிபட வேண்டும், தொடர்பு கொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள்.

இப்படி கடவுளை தொழ வருபவர்களின் மனநிலை எப்படி இருக்க வேண்டும்?

                இறைவனை தொழ வருபவர்கள் எப்படி வரவேண்டும் என்ன காணிக்கை கொண்டு வரவேண்டும் என்று இருக்கிறது.

பிரியமானவர்களே! இதில் இன்னொரு பகுதி இருக்கிறது இயேசு கிறிஸ்துவை தொழ வருகிறவனுடைய மனநிலை எப்படி இருக்க வேண்டும்? குறிப்பாக இயேசு கிறிஸ்துவின் சீடனுடைய மனநிலை எப்படி இருக்க வேண்டும்? ஆராதனையில் நம்முடைய புறநிலையில் அகநிலை எப்படி இருக்கிறது? புறநிலையில் அகநிலை எப்படி இருக்க வேண்டும் ? கிறிஸ்தவர்களாகிய நீங்கள் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கவேண்டும்?

இறைவனை தொழ வருகிறவர்களுடைய மனநிலை மறுரூபமாக்கப்பட்ட மனநிலை காணப்பட வேண்டும்.  

                வெறும் புறநிலை ஆராதனை மட்டும் ஆராதனை அல்ல. அந்த புறநிலை ஆராதனையில் நமது அகநிலை எப்படி  இருக்கின்றது?

It is not only an outward conformity of the rights of the rituals of a religion. But the inward state of the mind when we are coming to worship the Lord.

  1. ஒப்புரவாகுதல்

பிரியமானவர்களே! நாம் எல்லாரும் வாஞ்சிக்கிறோம். எல்லா மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட வேண்டும். கொரோனா தொற்று குறைய வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம். அப்படி தேவனை தொழ வரும்போது உங்களது மனநிலை எப்படி இருக்க வேண்டும்? நம்முடைய இருதயத்தில் சிந்தையில், பொறாமை, துர்க்குணம், பெருமை, பகை இவையெல்லாவற்றையும் வைத்துக்கொண்டு நாம் தேவனை தொழ வந்தால் தேவன் பிரியப்படுவாரா? அந்த தொழுகையை தேவன் ஏற்றுக்கொள்வாரா?

வேதம் சொல்லுகிறது. தேவனை நாம் ஏமாற்ற முடியாது. வஞ்சிக்க முடியாது. தேவனை நாம் கேலி பரிகாசம் செய்ய முடியாது.

சிறுபிள்ளைகளுக்கு உள்ள தத்துவ பாடல் ஒன்று: ஒருநாள் ஒரு பூனைக்குட்டி, இங்கிலாந்தில், கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும் மகாராணியை, சந்திப்பதற்கு இங்கிருந்து சென்றதாம். இந்த பூனைக்குட்டி திரும்பி வந்தபோது,   நீ எங்கு சென்றாய்? என்று அதனிடம் கேட்டார்களாம். அதற்கு நான் கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும் மகாராணியை பார்க்கப் போனேன், என்று பூனைக்குட்டி சொன்னதாம். போய் அங்கு என்ன பண்ணினாய்? என்று பூனையிடம் கேட்டதற்கு, அங்கிருந்த எலியுடன் விளையாடினேன், எலியை பயமுறுத்தினேன் என்று பூனை குட்டி சொன்னதாம். பூனையின் சுபாவம் பயமுறுத்துகிற சுபாவம் தான். எங்கு போயினும் பூனையின் சுபாவம் எலியை பயமுறுத்துவது. அதனுடைய சுபாவம் மாறவில்லை.

ஆராதனைக்கு வரவேண்டும், திருவிருந்து எடுக்க வேண்டும் என்றெல்லாம் வாங்குகிறீர்கள் உங்களுடைய சுபாவும் மாறி இருக்கிறதா  வாஞ்சிக்கிறீர்கள். சுபாவம் மாறாமலே ஆலயத்திற்கு வந்தாலும் ஒன்றுதான் வராவிட்டாலும் ஒன்றுதான். அவரை தொழ வரும் நாம், நம்முடைய சுபாவத்தை மாற்றியிருக்க வேண்டும். நம்மை சரி செய்து கொள்வதற்கு தான் இந்த கால இடைவெளியை தேவன் கொடுத்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. அவரை நாம் ஆராதிக்க கூடிவரும் போது முதலாவதாக நம்முடைய சுபாவம் மாறவேண்டும்.

2. உணர்வு வேண்டும்

இரண்டாவதாக நீ தேவனை தொழ வரும்போது, உன் பேரில் உன் சகோதரன் பெயரில், உனக்கு குறை உண்டு என்று நீ கண்டாயானால், அங்கே முதலில் நீ அதை உணர வேண்டும். உணர்வில்லாமல் இருக்கிறதினால்தான் அவருடைய ஜனங்கள் கெட்டுப் போகிறார்கள்.

உன்னுடைய சுபாவம் மாறாமல் ஆலயத்துக்கு வந்தால் என்ன? வராமல் போனால் என்ன?

                ஆலயத்துக்கு, தேவனுடைய, சமூகத்துக்கு வரும்போது, நல்ல உணர்வு வேண்டும். யாரோ ஒரு சகோதரனுக்கு உன் பெயரில் குறை உண்டு, குடும்ப உறவில் உன் பெயரில் குறை உண்டு என்று நீ கண்டாயானால், அந்த உணர்வு உனக்குள்ளே வரும் பொழுது முதலில் அதை நீ சரி செய்து கொள்.

குடும்ப உறவில்  மூன்று வகை உண்டு :

  1. இரத்த தொடர்பாக வருபவர்கள்
  2. திருமண உறவில் வருபவர்கள்
  3. தத்து எடுப்பதால் வரும்

இவர்கள் யாருக்கும் உன் பெயரில் குறைவு இருக்கிறதா என்று நீ உணர வேண்டும்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது இரத்த தொடர்புடைய நபர்களை குறிக்கும். இந்த மூன்று உறவுகள் தான் குடும்பம் என்று வரையறுக்கப்படுகிறார்கள். சகோதர, சகோதரிகள் இவர்கள் யாருக்காவது உன் பெயரில் ஒரு குறை இருக்குமானால், நீ செய்தது தவறு என்றால், மன்னிப்பு கேட்க வேண்டும். பின்பு ஆலயத்துக்கு வந்து பலி செலுத்த வேண்டும்.

ஆண்டவர் என்ன சொல்லுகிறார்? உன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கிறது? என பார்க்க கூறுகிறார். பிரியமானவர்களே! தன் சகோதரனை வீணன் என்று சொல்லுகிறவன், ஏன் கோவிலுக்கு வந்து இருக்கிறாய்?, என்று  நீ ஞாபகம் இல்லாமல் உன் சகோதரனை கோபப்படுத்தினால் கூட, நீ நீதிமன்றத்திற்கு போக வேண்டும். உன் சகோதரனை பார்த்து மூடனே என்று சொல்வாயானால், அல்லது உனக்கு ஒன்றும் தெரியாது என்ற சொல்லை பயன்படுத்தினாலே, நீ நரகத்திற்குப் பாத்திரமாய் இருக்கிறாய்.

அவனுக்கு ஒன்றும் தெரியாது என குற்றப்படுத்தினால் நீ ஆண்டவரை குற்றப்படுத்துகிறாய். நாம் பேசுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் கணக்குக் கொடுக்கவேண்டும்.

எனவே, சகோதரர்களோடு முன்பு ஒப்புரவாகி, பின்பு வந்து உன்னுடைய காணிக்கையைச் செலுத்து. முதலில் மற்றவர்களோடு ஒப்புரவாக வேண்டும். அதற்கு பின்பு தொழுது கொள்ளலாம். நாம் தேவனை தொழுது கொள்ள வரும் போது, யாரையும் நாம் வருத்தப்படுத்தியிருப்போம் என்றால், அதை சரி செய்து விட்டு பின்னர் வந்து தேவனை தொழுது கொள்ள வேண்டும். எப்படியாகிலும் ஆராதனைக்கு போகவேண்டும் திருவிருந்தில் பங்கெடுக்க வேண்டும் என்று விரும்புகிற நீங்கள் முதன்மையானது எது என்று தெரிந்து கொள்ளுங்கள். பின்பு வந்து காணிக்கை செலுத்தி, அதாவது தேவனை தேடி வந்து ஆராதனை செய்யுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கண்டிப்பாக நாம் கூடி வரவேண்டும், கர்த்தரை ஆராதிக்க வேண்டும், நம்மை கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று சொன்னால், முன்பு ஒப்புரவாக வேண்டும். பின்பு ஆலயம் வரவேண்டும். முதன்மையானது, காணிக்கை அல்ல, திருவிருந்து அல்ல, பலி செலுத்துவது அல்ல, ஒப்புரவாகுதல் ஆகும்.

3. மன்னிக்க வேண்டும்

மாற்கு 11 :25, 26 வசனங்கள் இவ்வாறு கூறுகிறது

  1. நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.

26. நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார்.

கண்டிப்பாக நாம் கூடி வரவேண்டும், உன்னை கர்த்தர் ஆசீர்வதிக்கவே வேண்டும் என்று சொன்னால் முன்பு மற்றவர்களை மன்னிக்க வேண்டும், பின்பு தேவனை தொழுது கொள்ள வேண்டும்.

நீங்கள் ஜெபம் பண்ணும்போது, ஜெபம் நடத்தும்போது உங்களுக்கு ஒருவர் பெயரில் வருத்தம் இருக்குமாயின் பரத்திலிருக்கும் தேவன் உங்கள் தப்பிதங்களை மன்னிக்கும்படி அவர்கள் குறையை மன்னிக்க வேண்டும்.

எபிரேயர் 12 : 12 முதல் 16 வரை உள்ள வசனங்களை காணலாம்

12. ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி,

13. முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்.

14. யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.

15. ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,

16. ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.

4. பாதையை செவ்வைப்படுத்துங்கள்

ஒப்புரவாகுதல் என்பது I am wrong, you are right என்று சொல்லும்பொழுது, மற்றவர்கள் மேல் உங்களுக்கு குறை இருப்பின் அதை தேவனுக்கு முன்பாக மன்னித்துவிடுங்கள். முடமாய் இருக்கிறது, பிசகாமல், சொஸ்தமாக பாருங்கள். சுத்தம் எப்படியாகிலும் சொஸ்தமாக வேண்டும். எப்படியாகிலும் ஒப்புரவாக பாருங்கள். இன்னும் இன்னும் பிரச்சனைகளை கூட்டாதிருங்கள். ஏற்கனவே, இது நெகிழ்ந்த கை, தளர்ந்த முழங்கால்கள். அதை எப்படியாவது நிமிர்த்த வேண்டும் . தேவனோடும், தேவ பிள்ளைகளோடும், எப்படியாகிலும் ஒப்புரவாகி இருக்க வேண்டும். குடும்பத்தோடு ஒப்புரவாகி இருக்க வேண்டும். யாவரோடும், சமாதானமாய் இருக்க நாடுங்கள். தேவனோடு சமாதானம், மற்றவர்களோடு கூட சமாதானம், உள்ளத்திலே சமாதானம். இதற்காய் நாடுங்கள்.  ஒருவரும் தேவனின் கிருபையை இழந்து போகாதபடிக்கு பாதையை செவ்வைப்படுத்துங்கள்.

சிலருடைய வார்த்தைகள், பேச்சுக்கள், கிண்டல்கள், விமர்சனங்கள், இதயத்தை சுக்குநூறாக உடைத்து விடுகிறது. மோசேயின் இதயத்தை உடைத்து இருக்கிறது. எலியாவின் இதயத்தை உடைத்து இருக்கிறது. யோனாவின் இதயத்தை உடைத்து இருக்கிறது. கசப்பான வேர் முளைத்து எழும்பி, கலக்கம் உண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படுகிறார்கள்.

5. எச்சரிக்கையாய் இருங்கள்

எபிரேயர் 12 :16 –ம் வசனத்திலே, எச்சரிக்கையாய் இருங்கள் என சொல்லப்பட்டிருக்கிறது.

மத்தேயு 18: 15 முதல் 17 வரை உள்ள வசனங்களில் இவ்வாறு காண்கிறோம்

15.உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.

16.அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.

17.அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.

உன் சகோதரன் அல்லது உறவுகள் உனக்கு விரோதமாய் குற்றம் செய்தால் அவரிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில் அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து என்று பார்க்கிறோம்.

பிரியமானவர்களே! உங்கள் பாதையை செவ்வைப்படுத்துங்கள். யாக்கோபு, ஏசாவை சந்திக்கப் போகும்போது வெகுமதிகளை கொடுத்து அனுப்பினான். பாதையை செவ்வைப்படுத்தினான். பிரியமானவர்களே! வெகுமதிகள் கோபத்தை தணிக்கும். அன்பை காட்டக்கூடிய வழியை செய்யுங்கள்.

பிரியமானவர்களே இவ்வளவு நீ முயற்சி செய்து, அவன் உனக்கு செவி கொடுத்தால், உன் சகோதரனை நீ ஆதாயப்படுத்திக் கொண்டாய். நான் எவ்வளவு சொல்லியும், அவன் கேட்காமல் போனால், இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே, சங்கதிகளெல்லாம் நிலைவரப்பண்ணும்படிக்கு, பொதுவாக உண்மையை பேசக்கூடியவர்களை  கூட்டி செல்ல வேண்டும். எப்படியாகிலும், காரியம் நிலைவரப்பட வேண்டும். காட்சிகளுக்கும் செவி கொடாமல் போனால், சபைக்கு தெரியப்படுத்து.

சபை, சங்கத்தார் சொல்லியும் அவன் செவி கொடாமல் போனால், அவன் உனக்கு அந்நியனை போலவும், ஆயக்காரனைப் போலவும். மாறிவிடுவான்.

 மத்தேயு 18: 18,19 வசனங்களில் பார்க்கிறோம்.

18. பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

19. அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நீங்கள் பூமியிலே எதை கட்டுவீர்களோ அவைகள் கட்டப்படும் . இரண்டு பேராவது, மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடுகிறீர்களோ, அங்கே அவர்கள் நடுவிலே நான் இருப்பேன்.

நம்முடைய ஆசீர்வாதத்திற்காக ஐந்து காரியங்களை முக்கியப்படுத்துகிறேன்.

  1. தேவனுக்கு ஏற்புடையதாக நாம் தேவனை ஆராதிக்கும்படி சகோதரர்களோடு ஒப்புரவாக வேண்டும்.
  2. அந்த சமாதானத்தை நாம் பெற்றுக் கொள்வதற்கு என்ன செய்ய முடியுமோ, அதை நாம் செய்யவேண்டும்.
  3. ஒப்புரவாகுதல் ஒரு தெய்வீக கடமை. இப்படியாக நாம் ஒப்புரவாகிவிட்டால், தேவ சமூகத்தில் நாம் அங்கீகரிக்கப்படுவோம்.
  4. மற்றவர்கள் நம்மை காயப்படுத்தி இருக்கும் போது மற்றவர்களோடு ஒப்புரவாவதற்கு, நம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
  5. தேவனுடைய சமூகத்தில் ஆராதிக்க வரும் முன்னே, நாம், உகந்த காணிக்கையாக இருக்க வேண்டும்.

                முன்பு, மேற்கூறிய, ஐந்து காரியங்களையும், நாம், நம்முடைய வாழ்க்கையிலே, பின்பற்றும்போது, பின்பு, தேவனுடைய ஆசீர்வாதங்கள் நம்மை நிரப்பும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

இந்த தேவ செய்தியை கேட்டு, முன்பு ஒப்புரவாகி, பின்பு இந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வோமா!..

முன்பு  ஒப்புரவு!..

                                     பின்பு  தேவ ஆசீர்வாதம்!!..

Share with