Message Title / தேவ செய்தி தலைப்பு : MY SPOUSE! – Part 2 | என் மணவாளியே! – பாகம் 2 | En Malavaliyae! – Paagam 2
Message Date / தேவ செய்தி நாள் : 17 September 2023 | 17 செப்டம்பர் 2023
Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
MY SPOUSE! – Part 2 | என் மணவாளியே! – பாகம் 2 | En Malavaliyae! – Paagam 2 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
உன்னதப்பாட்டு என்பது பாடல்களின் பாட்டு கர்த்தாதி கர்த்தர், தேவாதி தேவன். அதேபோல பாடல்களின் பாட்டு. SONG OF SONGS எல்லா பாடல்களிலும் இதுதான் பெரிய பாடல் .
பிரியமானவர்களே! எனக்கு மிகப் பிடித்த புத்தகம் உன்னதப் பாட்டு. என்னுடைய ஆரம்ப நாட்களில் என்னுடைய பிரசங்கங்களில் நிச்சயமாக ஒரு வசனம் உன்னதப் பாட்டிலிருந்து இருக்கும்.
நமது சபையிலும் கூட வேத வகுப்பில் உன்னதப்பாட்டில் இருந்து இரண்டரை வருடங்களாக செய்தியை எடுத்துள்ளேன். மிக அருமையான ஒரு புத்தகம். இந்த உன்னதப்பாட்டு சாலொமோனுக்கும், சூலமதியாளுக்கும் உள்ள ஒரு தொடர்பை குறிக்கும் பாடல் என்று சொல்லுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள், தேவனுக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்று சொல்லுவார்கள். கிறிஸ்தவர்கள்- சபைக்கும், கிறிஸ்துவுக்கும் இடையே உள்ள தொடர்பு என்று சொல்லுவார்கள். ஒரு குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள தொடர்பு என்றும் எடுத்துக் கொள்ளலாம். இந்த உன்னத பாட்டு கிறிஸ்துவுக்கும் எனக்கும் உள்ள ஒரு ஐக்கியம் என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம். என் மணவாளி (MY SPOUSE) என்று ஆறு முறை சூலமதியாலளை சாலொமோன் சொல்லுகிறார்.
மணவாளி என்பது
மணவாளியே என்ற சொல் வேதத்தில் உன்னதப்பாட்டை தவிர வேறு எங்கும் காணப்படவில்லை. வேதத்தில் பல இடங்களில் மணவாட்டி என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது மணவாளிக்கும், மணவாட்டிக்கும் உள்ள வித்தியாசம்- மணவாட்டி என்றால் திருமணமாகப் போகிற ஒரு பெண், மணமகள் அல்லது இப்போது மணம் முடித்த ஒரு பெண் . மணவாளி என்பது Partner in Life. இயேசுவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு என்பது நான் இயேசுவுக்கு மனைவியாக இருக்கிறேன், நான் இயேசுவுக்கு மணவாட்டியாக வாழ்வேன் ,என்னுடைய திருமண நாள் இனி வரப் போகிறது என்பதை எல்லாம் தாண்டி, நான் இயேசுவினுடைய Partner in life. இயேசு அவருடைய ஊழியங்களை என் மூலமாக செய்கிறார்.
இயேசுவின் நிறைவு
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவர் அவர் .ஆனால் அவர் நிறைவு உள்ளவர் அல்ல. எபேசியரில் பார்க்கிறோம். எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிற நிறைவாகிய சபை இல்லாமல், அவர் இல்லை. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிற அவருடைய நிறைவே சபைதான். அவர் தலை. நாம் சரீரம். சரீரம் இல்லாமல் அந்த தலை, வெறும் மண்டை ஓடு . தலை இல்லாமல் சரீரம் வெறும் முண்டம் என்பார்கள். இயேசு எனக்கு தலையாக இல்லாவிட்டால் நான் வெறும் முண்டம். ஆனால் சபை இல்லாவிடில் அவர் வெறும் தலை. இயேசுவை நிரப்புவதே சபைதான். He is incomplete without church.
ஆதாமுக்கு ஏவாள் ஏற்ற துணை. (Help mete –To meet the needs of Adam. She is the help mate to Adam) இயேசு என்னுடைய Life partner. அவருடைய நிறைவே சபை தான். இயேசுவினுடைய காரியங்களை நிறைவேற்றுவதற்கு 12 சீடர்கள் தேவை. அந்த 12 சீடர்களும் அநேகரை சீடர்களாக்குகிறார்கள்.
எனில் நான் யார் ?
அவருக்கு நான் மணவாளி, மணவாட்டி அல்ல (spouse not bride). நான் இயேசுவினுடைய மணவாளி. மணவாளியினுடைய தமிழ் சொல் – வாளி (வாள்) என்பது சுற்றி சுழல்வது. மணவாளி என்றால் அந்த வாசம் சுற்றி சுழல்கிறது என்று அர்த்தம். யார் மணவாளி? ஒரு வாசம் சுற்றி வீசுகிறது (வலப்பக்கம், இடப்பக்கம், முன் பக்கம் ,பின் பக்கமாக). அவரை தான் நாம் மணவாளி என்கிறோம்.
பிரியமானவர்களே ! எபேசியர் 4: 8 ல் இருந்து எபேசியர் 5: 1 வரைக்கும் அந்த மணவாளியினுடைய சில குண நலன்களை நாம் பார்த்து வருகிறோம். நம்முடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தேனாக பாலாக இருக்க வேண்டும். நம்முடைய வார்த்தைகள் மற்றவர்களுக்கு இனிமையையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டும். எப்படி இந்த வார்த்தைகள் நமக்குள்ளே வருகிறது? இருதயத்தின் நிறைவினாலே வாய் பேசுகிறது.
அந்தத் தேன் எப்படி வருகிறது? தேனி பல பூக்களில் உட்கார்ந்து உட்கார்ந்து, அந்த மதுரத்தை எடுக்கிறது. தேன் என்பது வெறும் பூவில் உள்ள தேன் அல்ல. அது நெய். இந்த பூவில் இருக்கும் நெய்யை அந்தத் தேனீ உறிந்து இப்பொழுது தேன் எங்கே சென்றிருக்கிறது? பூவில் இருக்கும் தேன், தேனியின் வாய்க்குள் சென்றிருக்கிறது, வயிற்றுக்குள் சென்றிருக்கிறது. இப்போது தேனி பறந்து தன்னுடைய தேன் கூட்டிற்கு சென்று, வயிற்றுக்குள் இருக்கும் அந்த தேனை கக்குகிறது. அதை சிறிது சிறிதாக சேர்த்து வைக்கிறது .அதுதான் தேன்கூட்டில் இருந்து வருகிற தேன். அது கெட்டுப் போகாமல் இருப்பதற்காக இன்றைக்கு பதப்படுத்துகிறார்கள். சுத்த தேன் எது என்றால் அந்த தேன் கூட்டில் இருந்து ஒழுகும் தேன் தான். அந்த சுத்த தேன் வேறொன்றுமில்லை . அந்த பூவிலிருந்து எடுத்த மதுரம், தேனி வயிற்றுக்குள் போய் process- ஆகி தேனி அதை வாந்தி எடுக்கிறது. இயேசுவின் நாமத்தில் சொல்லுகிறேன் ! உங்களது வாயில் தேன் ஒழுக வேண்டும் என்றால் வேதவசனத்தை வாசித்து, வாசித்து, தியானித்து, தியானித்து அந்த வார்த்தை உங்களுக்குள்ளாக போய், உங்களுக்குள்ளாக தன்மயமாகி அந்த வார்த்தை உங்களுக்குள்ளாக process ஆகி அந்த வார்த்தை வெளியே வந்தால் தான் தேன். வெறும் விவிலியத்தை வாசித்து விட்டு பிரசங்கம் பண்ணுவது தேன் அல்ல அது உங்களது வாழ்க்கையாக மாறி இருக்க வேண்டும். அந்த வார்த்தையை நீங்கள் இப்போது வெளியே சொல்லுகிறீர்கள் .அந்த தேனியின் வாயிலிருந்து வரும் தேனுக்குள் அவ்வளவு ரகசியங்கள் இருக்கிறது .எனவே வேத வசனத்தை தெளிவாக ஜாக்கிரதையாக வாசியுங்கள். போதகர் சுந்தரம் ஐயா அவர்கள் கூறியது எந்த அளவினால் அளக்கிறாயோ அந்த அளவினால் உங்களுக்கு அளக்கப்படும். உங்களுக்குள் இருக்கும் தன்மையமான வசனங்கள் வெளியே வர வேண்டும்.
உன்னதப்பாட்டு 4:11 என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின் கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது.
அவளுடைய வஸ்திரங்களில் இருந்து ஒரு வாசனை வருகிறது . அந்த வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கு ஒப்பாய் இருக்கிறது. அவளுடைய வஸ்திரங்களில் லீபனோனின் வாசனை வருகிறது என்றால் அவள் லீபனோனில் அலைந்து திரிந்திருக்க வேண்டும்.
உன்னதப்பாட்டு 4:10 உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப்பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமளதைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!
ஆதியாகமம் 27 :27 அவன் கிட்டப்போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல இருக்கிறது.
ஈசாக்கு யாக்கோபை முத்தம் செய்கிறான். யாக்கோபு ஏசாவின் வஸ்திரத்தை போட்டு இருக்கிறான். ஈசாக்கு யாக்கோபினுடைய வஸ்திரங்களின் வாசனையை முகர்ந்து இது என் குமாரனாகிய ஏசாவினுடைய வாசனை, கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையை போல் இருக்கிறது. அவன் நல்ல வயல்வெளியில் சஞ்சரிக்கிறான். அவன் வன சஞ்சாரியாய் இருக்கிறான். கருவாடு விற்பவர்கள் மீது கருவாட்டு வாசனை வரும். நல்ல வயல்வெளியில் வேலை செய்பவர்கள் மீது வயல்வெளியின் வாசனை வீசும். தோட்டத்தில் வேலை செய்பவர் மீது தோட்டத்தின் வாசனை வீசும். மல்லிகைப்பூ விற்பவர்கள் மீது மல்லிகை பூ வாசனை வரும். இந்த மணவாட்டியினுடைய வஸ்திரத்திலிருந்து லீபனோனின் வாசனை வீசுகிறது.
சாட்சியின் ஜீவியம்
சங்கீதம் 45 : 8 – தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது.
ராஜாவினுடைய வஸ்திரத்தில் நல்ல வாசனை வீசுகிறது பிரியமானவர்களே! வஸ்திரம் என்பது புதிய ஏற்பாட்டில் நமது சாட்சியின் ஜீவியத்தை காட்டுகிறது. ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். என்னை மற்றவர்கள் பார்க்கும் போது அவர்களுக்கு ஒரு Impression உண்டாகும். ஒவ்வொரு துறையில் வேலை பார்ப்பவருக்கும் ஒவ்வொரு Dress code உண்டு. அவர்களை பார்க்கும்போது ஒரு Impression வரும். அதுதான் வஸ்திரம். ஆவிக்குரிய பிரகாரமாக நாம் வஸ்திரம் என்று சொல்லுவது நம் சாட்சியின் ஜீவியத்தை குறிக்கும். இந்த சாட்சியின் ஜீவியத்தில் நமது வாழ்க்கையில் ஒரு பெரிய வாசம் வீசும் .
என்ன பெரிய வாசனை அது?
மற்றவர்கள் உங்களுடைய நடை, உடை, பாவனையை பார்க்கும்போது ஒரு வாசனை உங்களிலிருந்து வரவேண்டும்.
அது என்ன வாசனை ?
2 கொரிந்தியர் 2:16 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்?
2 கொரிந்தியர் 2:14 கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
என்ன நடக்கிறது ?
எங்களைக் கொண்டு, எங்களின் சாட்சியின் ஜீவியத்தைக் கொண்டு , நாங்கள் வேலை செய்யும் இடங்களில், நாங்கள் இருக்கும் இடங்களில் எல்லா இடங்களிலும், எங்களை வெற்றி சிறக்க பண்ணும் , எங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் எங்களுக்கு தோல்வி இல்லை என்று எங்களை வெற்றி சிறக்க பண்ணி, எங்களைக்கொண்டு கிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனை பார்க்கும் பொழுது, மற்றவர்கள் என்னிடம் பேசும்பொழுது, பழகும் பொழுது ,அவர்கள் கிறிஸ்துவை அறிய வேண்டும். என்னுடைய வஸ்திரத்தில் மற்றவர்கள் கிறிஸ்துவை அறிகிற வாசனையை நான் வீச செய்ய வேண்டும். அந்த வஸ்திரத்தில் கர்த்தருடைய பரிமள தைலத்தை பூச வேண்டும்.
ஒரு பெரிய கல்வி நிறுவனத்தில் பெரிய பிரச்சனை ஏற்பட்ட பொழுதும் ஒரு வாலிப மகன் மிகவும் அமைதியாக இருந்தான். அவனைப் பார்த்து அந்தப் பள்ளியின் முதல்வர் இவ்வாறாக கேட்டார் -How is that you are different? இந்த மகன் அந்த முதல்வரிடம் கூறுகிறான் . GOD IS GOOD. நாம் மணவாளி என்று சொல்ல வேண்டுமானால் அவரை அறிகிற வாசனை நம் வாழ்க்கையில் வீச வேண்டும்.
உன்னுடைய குண நலனில் (Behaviour) என்ன வாசனை வீசுகிறது ?
அவருடைய அன்பு, இரக்கம், மன உருக்கம், பொய் சொல்லாமை , அவருடைய குண நலன் உன்னில் வீசுகிறதா? மற்றவர்களில் இருந்து நீ வித்தியாசமானவனாக அவருடைய பிள்ளையாக காணப்படுகிறாயா? அவருடைய வாசனை உன்னில் வீசுகிறதா? YOU ARE DIFFERENT.
நாம் மணவாளி என்று சொல்லப்பட வேண்டுமானால் அவரை அறிகிற அறிவின் வாசனை நம்மில் வீசும்.
ஓசியா 14 :5 நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.
ஓசியா 14 :6 – அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்.
திருநெல்வேலிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது?
அந்த ஊரை சுற்றிலும் வயல் இருந்தது. அந்த வயலே அந்த ஊருக்கு ஒரு வேலி போல இருந்ததால் அதை நெல் வேலி என்று அழைத்தார்கள். அதுதான் திருநெல்வேலி என்று ஆயிற்று .அந்த ஊரின் அருகில் செல்லும்போதே அந்த வயல்வெளியின் வாசனை வரும். அதேபோல் சில மலைப்பகுதிகள் அருகில் போகும்போது, அந்த தைல மரங்களின் வாசனை, காட்டு மரங்களில் வாசனை வரும். அதுபோல லீபனோனின் வாசனை வரும். நான் இஸ்ரவேலருக்கு பனியை போல் இருப்பேன். இஸ்ரவேலுக்கு நான் லீபனோனின் வாசனையை போல் இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஓசியா 14 :7 அவன் நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படருவார்கள்; அவன் வாசனை லீபனோனுடைய திராட்சரசத்தின் வாசனையைப்போல இருக்கும்.
அவன் நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள். நம்மைச் சுற்றி ஒரு நல்ல வாசனை வீச வேண்டும்.
2 கொரிந்தியர் 2:15 இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.
நானே கிறிஸ்துவின் நற்கந்தமாக இருக்க வேண்டும். கிறிஸ்துவினுடைய அறிவை அறிகிற வாசனையை வீசிக்கொண்டு நான் வகுப்பில் அமர்ந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய நடை, உடை, பழக்க வழக்கங்கள் விழுமியங்களை மற்ற நண்பர்கள் பார்க்கிறார்கள். எல்லாவற்றிலும் கிறிஸ்துவை அறிகிற வாசனை வீசுகிறது அவர்களில் நல்லவர்களும் இருப்பார்கள் , கெட்டவர்களும் இருப்பார்கள். அவர்களில் இரட்சிப்புக்கு ஏதுவானவனும் இருப்பான். நாசமடைகிறவனும் இருப்பான். என்னில் வீசுகிறது கிறிஸ்துவை அறிகிற ஒரே வாசனை. என்னுடைய அலுவலகங்களில், என் மற்ற நண்பர்கள், வேலை தளங்களிலும் இரட்சிக்கப்படுகிறவர்களுக்கும் கெட்டுப் போகிறவர்களுக்கும் நாம் நற்கந்தமாக இருக்கிறோம். என்னில் வீசுவது நல்ல வாசனை தான். கிறிஸ்துவின் வாசனை தான். கெட்டுப் போகிறவர்களுக்குள்ளே மரண வாசனையாகவும் , இரட்சிக்கப்படுபவர்களுக்குள்ளே ஜீவனுக்கு ஏதுவான வாசனையாகவும் இருக்கும். நான் நான்தான். நான் கிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனையை வீசுகிறேன்.
இயேசு நன்மை செய்கிறவராகவே சுற்றித்திரிந்தார் கேட்டுக்கு ஏதுவானவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
உங்களில் அவரை அறிகிற அறிவின் வாசனை வீசும் போது கெட்டுப் போகிறவர்களுக்கு அது மரணத்திற்கு ஏதுவான வாசனையாக தான் இருக்கும் இரட்சிக்கப்படுபவர்களுக்கு அதே வாசனை ஜீவனுக்கு ஏதுவாக இருக்கும்.
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக! அந்த நூற்றுக்கு அதிபதி! அவனை பொறுத்தவரை இவர் ஒரு தேச துரோகி ! சீசருக்கு விரோதமாக எழும்பினவன். அந்த ஊரில் இருந்தவர்கள் அனைவரும் இவனை சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்! என்று கத்தினார்கள் . இவன் அப்பொழுதுதான் தன்னுடைய வேலை நிமித்தமாய் ரோம் நகரத்துக்கு வந்திருப்பான்.
இயேசுவின் வாசனை
அவர் நீரில் மேல் நடந்ததை அவன் பார்க்கவில்லை .தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியதை பார்க்கவில்லை. லாசருவே வெளியே வா என்ற போது மரித்த லாசரு வெளியே வந்ததை இவன் பார்க்கவில்லை. அந்த பாடையைத் தொட்டு வாலிபனே எழுந்திரு என்று சொன்ன போது வாலிபன் எழுந்து உட்கார்ந்ததை இவன் பார்க்கவில்லை. 38 வருஷம் படுத்த படுக்கையாக இருந்தவனை உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொன்னபோது அவன் எழுந்து நடந்ததை இவன் பார்க்கவில்லை இவனுக்கு தெரிந்ததெல்லாம் இவர் ஒரு தேச துரோகி.
இவர் தேவனுடைய குமாரன்.
கவர்னர் பிலாத்து இவருக்கு விரோதமாக தீர்ப்பு சொல்லி இருக்கிறார் . இவரை சேர்ந்த யூத மக்களும் இவரை சிலுவையில் அறையும்படி சொல்லி இருக்கிறார்கள் அவ்வளவு மோசமான ஒருவன் இன்றைக்கு முள் முடி சூட்டப்பட்டு தாடை முகமெல்லாம் உமிழ் நீர் இரத்த கோலம் (BLOODY) அந்தக் கோலத்தில் இருந்த அவரைப் பார்த்து அவன் சொல்லுகிறான், இவர் தேவனுடைய குமாரன். அவர் செய்த அற்புதங்களை பார்த்து அவன் சொல்லவில்லை. நம்முடைய வாழ்க்கையில் அவரை அறிகிற அறிவின் வாசனை வீசப்படுமானால் மெய்யாகவே நீங்கள் இயேசுவை பின்பற்றுபவர்கள் என்று மற்றவர்கள் கூறுவார்கள் .நான்கு வயதில் டாக்டர் பில்லி கிரகாம் இரட்சிக்கப்பட்டார். ஐந்து வயதில் சகோதரி எப்சிபா பிரவீன் ரட்சிக்கப்பட்டார் .
நான்கு வயதில் ஒரு பில்லி கிரகம் இரட்சிக்கப்பட்டாரெனில் கர்மேலிலும் மூன்று வயதில் ஒரு பிள்ளை இரட்சிக்கப்படக்கூடும் ஆண்டவரை பார்த்து கேளுங்கள்.
அவரை அறிகிற அறிவின் வாசனை என்னில் வீச வேண்டும். என்னை பார்ப்பவர்கள் கிறிஸ்துவை பார்க்க வேண்டும். கர்மேலிலும் என் மணவாளியே? என் ஆண்டவரே! அந்த லீபனோனின் வாசனை, கர்த்தரை அறிகிற அறிவின் வாசனை என் வஸ்திரத்தில் வீச வேண்டும்.
இயேசுவின் வாசனை என்னில் வீசட்டும்!
என் வஸ்திரத்தின் வாசனை இயேசுவை பறைசாற்றட்டும்!
மணவாளியாய் இயேசுவின் வாசம் சுழலட்டும்!
மாந்தர் யாவரும் மகிபனின் மந்தையில் சேரட்டும்!