Message Title / தேவ செய்தி தலைப்பு : MY SPOUSE, YOU ARE MY GARDEN – Part 3 | என் மணவாளியே, நீ என் தோட்டம் – பாகம் 3 | En Malavaliyae, Nee En Thootham – Paagam 3
Message Date / தேவ செய்தி நாள் : 01 October 2023 | 01 அக்டோபர் 2023
Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
MY SPOUSE, YOU ARE MY GARDEN – Part 3 | என் மணவாளியே, நீ என் தோட்டம் – பாகம் 3 | En Malavaliyae, Nee En Thootham – Paagam 3 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
நாள் : 01.10.2023.
தலைப்பு: என் தோட்டம்! அவருடைய தோட்டம் !
போதகர் : முனைவர் திரு. இராபர்ட் சைமன்.
இன்றைய காலை வேளை தியானமாக உன்னதப்பாட்டு 4 ஆம் அதிகாரம் 11ஆம் வசனம் முதல் ஐந்தாம் அதிகாரம் ஒன்றாம் வசனம் வரை தியானிக்கலாம். அதை தியானிப்பது இன்பமாக இருக்கிறது.
பிரியமானவர்களே, மணவாளி என்ற சொல் உன்னதப்பாட்டில் நான்காம் அதிகாரத்தில் எட்டாம் வசனம் முதல் ஐந்தாம் அதிகாரம் வரை ஆறு தடவை வருகிறது. மணவாளி என்ற சொல் ஆங்கிலத்தில் SPOUSE என்று இருக்கிறது. ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரையாக இந்த சொல் வேறு எங்கும் பயன்படுத்தப்படவில்லை.
விவிலியத்தில் மணவாட்டி என்ற சொல் இருக்கிறது மணவாட்டிக்கும், மணவாளி என்ற சொல்லுக்கும் வித்தியாசம் உண்டு. மணவாட்டி என்று சொன்னால் ஆங்கிலத்தில் BRIDE என்று பொருள். Bride is a girl ready to be married. திருமணம் ஆவதற்கு, திருமண நிகழ்ச்சிக்கு ஆயத்தமாய் இருக்கிற ஒரு பெண். திருமணமான பிறகு அவள் wife (மனைவி). மணவாட்டி என்பது ஒரு சிறிய காலத்திற்கு (short period). ஆனால் spouse என்பது வாழ்க்கைத் துணை என்று பொருள். நாம் இயேசுவினுடைய மணவாளி.
மணவாளி என்ற தமிழ் சொல் மிக அருமையான சொல். மணம் என்றால் நறுமணம், வாசனை. வாளி என்றால் சுற்றி சுழல்வது. அதாவது நம்மை சுற்றி வாசனை சுற்றி சுழல்வது என்றாகும். வாசனை சுற்றி சுழலுகிற ஒரு இன்பமான வாழ்க்கைக்கு பெயர் மணவாளி.
கடந்த செய்தியில் இருந்து சில துளிகள்:
1. மணவாளியினுடைய வாயிலிருந்து வருகிற வார்த்தைகள் இனிய வார்த்தைகள், சத்தான வார்த்தைகள் ,ஆரோக்கியமான வார்த்தைகள்.
மணவாளியினுடைய வாயிலிருந்து வருகிற வார்த்தைகள் தேனினுடைய தன்மையை கொண்டவை, பாலினுடைய தன்மையை கொண்டவை. பூனைக்கு ஒரு காலம், யானைக்கு ஒரு காலம் என்ற பழமொழியை குறித்து பார்த்தோம். எவ்வளவு வயதானாலும் தேன் சாப்பிடலாம். தேன் நல்லது. பால் சாப்பிடுவதற்கு ஒரு காலம், தேன் சாப்பிடுவதற்கு ஒரு காலம் உண்டு. பாலும் தேனும் ஓடுகிற கானானுக்கு இன்ப கானான் என்று சொல்லுகிறோம். இன்ப கானான் தேவனுடைய வாக்குத்தத்த செழிப்பை காட்டுகிறது. நம்முடைய வார்த்தை அப்படியாக இருக்க வேண்டும்.
வஸ்திரம் என்பது புதிய ஏற்பாட்டில் நமது சாட்சியின் ஜீவியத்தை காட்டுகிறது. இந்த சாட்சியின் ஜீவியத்தில் நமது வாழ்க்கையில் ஒரு பெரிய வாசம் வீசும் . இந்த வாசனை லீபனோனின் வாசனைக்கு ஒப்பாய் இருக்கிறது. சகலகந்தவர்க்கங்களை பார்க்கிலும் உன் பரிமள தைலங்கள் வாசனையாக இருக்கிறது. அது நம்முடைய வாழ்க்கையில் வாசனை வீசுகிற ஒரு ஜீவியத்தை காட்டுகிறது.
என்ன வாசனை?
கிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனை நம் வாழ்க்கையில் வீச வேண்டும். அது சிலருக்கு ஜீவனுக்கு ஏதுவாக இருக்கும். சிலருக்கு மரணத்திற்கு ஏதுவாக இருக்கும். எல்லா இடத்திலும் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்க பண்ணுகிற அவரை அறிகிற அறிவின் வாசனை வீச வேண்டும்.
இன்றைக்கு அதன் தொடர்ச்சியாக அந்தத் தோட்டத்தை குறித்து மாத்திரம் ஆண்டவர் என்னோடு கூட பேசினார் .
உன்னதப்பாட்டு 4: 12 என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்.
என் மணவாளியே நீ அடைக்கப்பட்ட தோட்டம்! உன்னதப் பாட்டு புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு புத்தகம். எல்லா செய்திகளிலும் இந்த புத்தகத்திலிருந்து ஒரு வசனம் இருக்கும். மீண்டுமாக அந்த உன்னதப்பாட்டை தியானிக்க கர்த்தர் கொடுத்த கிருபைக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். என்னை தாழ்த்தி கர்த்தரை நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறேன். இங்கே அநேக புதிய காரியங்களை நான் பார்க்கிறேன்.
முதலாவது இந்த தோட்டத்தை பற்றி மட்டும் ஏழு குறிப்புகளை பார்க்கலாம்.
GARDEN & FOREST
1. மணவாளி தோட்டம். அது அடைக்கப்பட்ட தோட்டம்.
→ தோட்டம் என்பது ஒரு தோட்டக்காரனாலே நிறுவப்படுகிறது.
→ தோட்டம் திட்டமிட்டு (PLANNED) உருவாகிறது. காடு யாரும் திட்டமிட்டு உருவாவதில்லை.
→ தோட்டத்தில் ஒரு ஒழுங்கும் கிரமமும் காணப்படும்.
ஒரு தென்னை மரம் நட்டாலும், இரண்டு தென்னை மரங்கள் நட்டாலும், அதற்கிடையில் எவ்வளவு தூரம் இருக்க வேண்டும், என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும் என்று மிகுந்த திட்டமிட்டு அதை நடுவார்கள். ஆனால் காட்டில் ஒரு மரம் வளரும் போது அப்படியாக திட்டமிட்டு வளராது. ஆங்காங்கே மரங்கள் வளரும் . ஆனால் தோட்டத்தில் இந்த இடத்தில் ரோஜா செடி, இந்த இடத்தில் மல்லி செடி, இந்த இடத்தில் குரோட்டன்ஸ், இந்த இடத்தில் தென்னை மரம் என்று திட்டமிட்டு தோட்டக்காரன் நடுவான்.
பிரியமானவர்களே! கிறிஸ்தவர்கள் கல்லறைத் தோட்டம் என்பார்கள் .பிற இன மக்கள் இடுகாடு, சுடுகாடு என்பார்கள். கல்லறை வைத்தாலும், வரிசையாக பிணத்தை அடக்கம் பண்ணுகிறதிலும் ஒரு வரிசை இருக்கும். அது ஒரு கல்லறை தோட்டம். ஒரு வரிசை இருக்கும் ஒரு அழகு இருக்கும். தோட்டத்தை தோட்டக்காரன் விசாரிப்பான். காட்டில் யாரும் நீர் பாய்ச்சமாட்டார்கள். ஆனால் தோட்டத்தில் தோட்டக்காரன் நீர் பாய்ச்சுவான். செடிகளுக்கு தோட்டத்தில் கிளை நறுக்குவார்கள். பூச்சிக்கொல்லி மருந்து போடுவார்கள்.
பிரியமானவர்களே! இன்றைக்கு அநேகரது வாழ்க்கை வெறும் காடாக இருக்கிறது. எந்த ஒழுங்கும் கிடையாது. யாரும் விசாரிப்பது கிடையாது. யாரையும் விசாரிக்க விடுவதும் கிடையாது. தன்னுடைய இஷ்டம் போல் வாழ்கிறார்கள். காட்டில் செடி வளர்வது போல் வளர்கிறார்கள்.
முதலாவது நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் .
உங்களது வாழ்க்கை தோட்டமா? காடா?
ஒரு Town க்கும் Village க்கும் ரொம்ப வித்தியாசங்கள் உண்டு. Town- னில் நிறைய சட்ட திட்டங்கள் இருக்கும். Town -ல் இடது பக்கம் தான் வண்டி ஓட்ட வேண்டும், சிக்னலை பார்த்தால் வண்டியை நிறுத்த வேண்டும். Rules இருக்கும். ஆனால் கிராமத்தில் சிக்னல் இருக்கிறதா? இல்லையே.
உங்களுக்கு என்ன வாழ்க்கை வேண்டும்?
காட்டு வாழ்க்கை வேண்டுமா ? நாட்டு வாழ்க்கை வேண்டுமா?
யாரும் stop line போடக்கூடாது. யாரும் இப்படி போ, அப்படி போ என்று சொல்லக்கூடாது. நான் என் இஷ்டப்படி ஓட்டுவேன். நீ டவுனில் வாழ்கிறாயா? அல்லது காட்டில் வாழ்கிறாயா? இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் கூட பிரமாணங்கள் வேண்டாம், நாம் எல்லோரும் நியாய பிரமாணத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல ,நியாயப்பிரமாணங்கள் எல்லாம் முடிந்து விட்டது, உண்மையாகவே அதைப்போல பேய்த்தனத்துக்கு அடுத்த உபதேசம் வேறு எதுவும் கிடையாது. நாம் நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகள் அல்ல .
கிருபையை கர்த்தர் தந்திருக்கிறார். எதற்காக?
நான் நியாயப்பிரமாணத்திற்கு அடிமையாக இருப்பதற்காக அல்ல. அந்த நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவதற்கு கர்த்தர் எனக்கு கிருபையை தந்திருக்கிறார். அந்த ஒழுங்கான வாழ்க்கைக்கு கிருபையை தந்திருக்கிறார். யாருக்கு அந்த ஒழுங்கு தெரியுமோ, அவன் தோட்டத்தில் இருக்கிறான் . ஒழுக்கங்கள் பிடிக்காதவர்களுக்கு சபையும் பிடிக்காது. ஒழுங்கற்ற கட்டுப்பாடற்ற வாழ்க்கையை நிறைய பேர் விரும்புகிறார்கள். குடும்பத்தில் கட்டுப்பாடு வேண்டாம். கட்டுப்பாடுகள் வேண்டாம். ஒழுக்கங்களை விரும்பாதவர்களுக்கு வீட்டில் இருக்க பிடிக்காது. அம்மா நிறைய கேள்விகளை கேட்கிறார்கள். அவனுக்கு வீட்டில் வாழ பிடிக்கவில்லை. அவன் எங்கே போக விரும்புகிறான். அவன் காட்டிற்கு போக விரும்புகிறான். நான் ஒரு சுதந்திர பறவையாக இருக்க விரும்புகிறேன்.
தோட்டம் என்று சொன்னால் ஒழுங்கு உண்டு. தோட்டத்தில் வேலி இருக்கும். பராமரிப்பு இருக்கும். ஒரு பூச்சிக்கொல்லி வராமல் பார்ப்பார்கள் . காட்டிற்கும் தோட்டத்திற்கும் மிகுந்த வித்தியாசங்கள் உண்டு. மணவாளி காடு கிடையாது. மணவாளி தோட்டம். அது அடைக்கப்பட்ட தோட்டம்.
2. இதை ஒரு புதை பொருள் போல நான் பார்த்தேன்.
அவள் என்ன சொல்லுகிறாள் என் தோட்டத்தில் வீசும் மணவாளன் என்ன சொல்லுகிறான் உன் தோட்டம் என்கிறான். அது என் நேசர் தம்முடைய தோட்டத்திற்கு என்று கூறுகிறாள்.
அது யாருடைய தோட்டம்?
உன்னதப்பாட்டு 5:1 என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன் , என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு புசித்தேன்; என் திராட்சரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்.
அது யாருடைய தோட்டம் ?
மணவாளனுடைய தோட்டமா?
மணவாளியினுடைய தோட்டமா?
யாருடைய தோட்டம்?
ஒரு பெரிய ஆவிக்குரிய இரகசியம் இதில் இருக்கிறது. என் தோட்டம் அவரது தோட்டம். என் வாழ்க்கை அவரது வாழ்க்கை. எனக்குண்டானது அவருக்குரியது. அவருக்குண்டானது , என்னுடையது. அவர் சொல்லுவார் நான் அவருடையவர், நான் சொல்லுவேன் – அவர் என்னுடையவர்.
பிரியமானவர்களே!, எனக்கு நினைவுக்கு வருகிறது முதன் முதலில் ACA சபையில் போதகர் காலை ஆராதனையில் திடீரென்று நீ வார்த்தையை பேசு என்று கூறினார் ஆராதனை நடந்து கொண்டிருக்கிறது என் நேசர் என்னுடையவர் நான் அவருடையவர் இதற்குரிய வித்தியாசத்தை குறித்து ஐந்து காரியங்களை நான் முதல் பிரசங்கமாக அன்று பேசினேன். ஆயத்தப்படுத்தி அல்ல, பிரியமானவர்களே! இன்றைக்கு அந்த இரகசியத்தை கூறுகிறேன். என்னுடையது அவருடையது, அவருடையது என்னுடையது. என்னுடைய வீடு அவருடைய வீடு. என் நேசர் என்னை ஆசீர்வதிக்கிறார். அவருடைய ஊழியக்காரர்களை ஆசிர்வதிக்கிறார். பிரியமானவர்களே! நான் அவருடையவர் , அவர் என்னுடையவர். எனக்குரியதெல்லாம் அவருடையது, அவருக்குரியதெல்லாம் என்னுடையது. இந்த இரகசியம் பெரியது. நாம் இருவராய் இராமல் ஒருவராய் இருப்போம். என் தோட்டம் அவருடைய தோட்டம், அவருடைய தோட்டம் என்னுடைய தோட்டம் .
3. என் தோட்டம் சிங்கார வனம்.
உன்னதப்பாட்டு 8: 13, 14
13 தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும்.
14 என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள் மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.
சிங்கார வனம்
இந்த வசனங்களில் கூறப்பட்டுள்ள 12 விதமான ஆசீர்வாதங்கள். 12 அப்போஸ்தலர்களுடைய உபதேசங்களை குறிக்கும். வெள்ளைப் போளம் சுத்திகரிப்பை காட்டுகிறது. மாதுளங்கள் பிரமாணங்களை குறிக்கிறது. இந்த 12 விதமான மரங்களும் செடிகளும் சேர்ந்தது சிங்கார வனம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. வெறும் வனம் என்று அல்ல. சிங்கார வனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.. மணவாளியினுடைய வாழ்க்கை செழிப்பாக சிங்கார வனமாக இருக்கிறது. இந்த 12 ஆசீர்வாதங்களையும் பெற்றிருக்க வேண்டும் என்றால் இந்த நதி போகும் இடமெல்லாம் ஜீவன் உண்டாயிருக்கும். என் மணவாளியே! ஆவியானவருடைய தோட்டமாகிய என் தோட்டம் சிங்கார வனம்.
→ என்னுடைய தோட்டம் சிங்கார வனம்.
→ என்னுடைய தோட்டம் ஒரு நீர் ஊற்று, தானாகவே பூமியை வெடித்து கொண்டு பொங்கி வருவது நீர் ஊற்று. அதேபோல வானத்தின் பலகணிகளை திறந்து இடம் கொள்ளாமல் , நாம் தேடி போகாமலேயே, நம்மை ஆசீர்வதிப்பார்
→ என்னுடைய தோட்டம் ஜீவத்தண்ணீரின் துறவு (கிணறு) பூமியின் ஆழத்திலிருந்து நாம் தோண்டி தண்ணீரை எடுப்போம். வசனங்களை தியானித்து தியானித்து, நாம் கஷ்டப்பட்டு பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதங்களை இது குறிக்கும்.
→ என்னுடைய தோட்டம் ஒரு ஆறு. லீபனோனில் இருந்து நதி ஓடி வருகிறது அவரிடத்தில் இருந்து அந்த ஜீவ நதி ஓடிவரும்.
ஏதேன் தோட்டம் போல நமது வாழ்க்கையை கர்த்தர் பார்த்து, பார்த்து செய்து கொண்டிருக்கிறார். இது ஒரு தோட்டம். இது அவருடைய தோட்டம். இது சிங்கார வனம். ஆங்கிலத்தில் சிங்கார வனம் என்பதை PARADISE என்பார்கள்.
4 . வாடையே எழும்பு! தென்றலே வா!
உன்னதப்பாட்டு 4:16 வாடையே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக.
வடக்கே இருந்து வீசும் காற்று வாடைக்காற்று. தெற்கே இருந்து வீசும் காற்று தென்றல் காற்று. மார்கழி மாதத்தில் பனி அதிகமாகப் பெய்யும் போது வாடைக்காற்று, பயங்கரமாக குளிரும். பனி படரும். இதை பீட மாதம் என்பார்கள் .மணவாட்டி சொல்லுகிறாள். வாடையே எழும்பு! வா பார்த்துக் கொள்ளலாம். யாக்கோபுவில் சொல்லப்பட்டிருக்கும், உங்களுக்கு வருகிற உபத்திரவங்களை தங்களுக்கு அந்நிய காரியமாக கருதாமல் அதை வரவேற்க கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் அநேக கஷ்டங்கள் பிரச்சனைகள் வரும் அதை கண்டு பயந்துவிடாதீர்கள்.
பிசாசு நம்முடைய அடிப்படை தேவைகளையே முதலில் சோதிப்பான்.
இயேசு என்ன பதில் சொன்னார்?
மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல. தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உணர்த்துவதற்காக , நீ உணரும்படிக்கு. இதனால் இப்படிப்பட்ட சில சூழ்நிலைகளை கர்த்தர் அனுமதிப்பார். அவர் உன்னை சிறுமைப்படுத்துவார். பசியினால் வருத்துவார். நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினாலே உன்னை போஷிப்பார். இயேசு 40 நாள் பிசாசினாலே சோதிக்கப்பட்டார்.
பிசாசு அவருக்கு கொண்டு வந்த முதல் சோதனை என்ன?
அவருக்கு பசி உண்டாயிற்று..
நம்முடைய அடிப்படைத் தேவைகளை சோதிப்பது பிசாசினுடைய stand. கர்த்தர் பார்த்துக் கொள்ளுவார் என்பது கிறிஸ்தவர்களின் stand.
முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் என்று வசனம் சொல்லுகிறது. நாம் அவருடைய இராஜ்ஜியத்தையும் நீதியையும் முதலாவது தேட வேண்டும். இனி தப்பி பிழைப்பேன் என்ற நம்பிக்கையே இல்லை. இயேசு தண்ணீரின் மீது நடந்து வருகிறதை கண்டு, பேதுரு , எதிர்காற்றையும் மீறி விசுவாசத்தோடு இயேசுவை நோக்கி நடந்து போகிறார்.
வாடையே எழும்பு! தென்றலே வீசு! என்று தைரியமாக சொல்லுங்கள். போராட்டங்கள், பிரச்சனைகள் வரட்டும். தைரியமாக சந்தியுங்கள். வாடையும் தென்றலும் மாறி மாறி என் தோட்டத்தில் வீசட்டும். என் நேசர் கந்தப் பிசின்கள் வடிகிற தன் தோட்டத்திற்கு வந்து தன் கனிகளை புசிப்பாராக.
5. என் நேசர் உலாவுகிற தோட்டம்.
உன்னதப்பாட்டு 5:1 என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு புசித்தேன்; என் திராட்சரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்.
என் நேசர் என்னுடைய தோட்டத்தில் வந்து உலாவுகிறார் . என்னோடு கூட பேசுகிறார் . அவர் உங்களில் தங்கி, உங்களில் உலாவுகிற பரிசுத்த ஆவியானவர்! இதோ வாசற்படியிலே நின்று கதவை தட்டுகிறேன் ஒருவன் என் சத்தத்தை கேட்டு கதவை திறந்தால் ஆதில் நான் உள்ளே பிரவேசித்து அவனோடு கூட போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடு கூட போஜனம் பண்ணுவான் .ஏதேன் தோட்டத்தில் உலாவின அதே தேவன் உன் தோட்டத்தில் வருகிறேன் என்று சொல்லுகிறார், உன் வீட்டிலும் வருகிறேன் என்று சொல்லுகிறார், உன்னுடைய வேலை ஸ்தலத்திற்கு நான் வந்து பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லுகிறார்.
இன்றைக்கு எத்தனை பேர் கர்த்தர் நம் வீட்டிற்கு வந்து நம்மோடு கூட உலாவ வேண்டும் என்று வாஞ்சிக்கிறீர்கள்?
நம் கூட ஆண்டவர் இருக்க வேண்டும். ஆண்டவர் உங்களோடு கூட வந்தால் ஒருவேளை உலக பிரகாரமான காரியங்களை உங்களால் செய்ய இயலாது.
உங்களோடு கூட ஆண்டவர் வரவேண்டுமா? வேண்டாமா?
நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அந்த மணவாளி யார் தெரியுமா? அவர் எப்பொழுது வருவார், எப்பொழுது வருவார் என்று காத்துக் கொண்டிருப்பவர் தான் அந்த மணவாளி. அந்த மணவாளி என் தோட்டத்திற்கு வாரும் என்று சொல்லுகிறாள் அவரும் வந்து அந்தத் தோட்டத்தில் உலாவுகிறார்.
எனக்கு வெள்ளைப்போளம், கந்த வர்க்கம் , தேன், திராட்சை ரசம், பால் கிடைத்தது ?
யாருக்கு கிடைத்தது?
கர்த்தருக்கு கிடைத்தது
கர்த்தர் நம்மிடத்தில் வந்து உலாவும் போது, வெறும் கனி, பால் மாத்திரமல்ல, தேன், திராட்சை ரசம் கொடுக்கிறோம். ஆண்டவருக்கு மாத்திரமல்ல, அவருக்கு பிரியமானவர்களுக்கும் கொடுக்கிறோம். நம்முடைய வாழ்க்கையிலும் இந்த சிறியரில் ஒருவருக்கு எதை செய்கிறாயோ, அதை எனக்கே செய்தாய் என்கிறார். சிறுமை பட்டவன் மேல் சிந்தை உள்ளவன் பாக்கியவான். நம்முடைய வாழ்க்கையில் இயேசுவுடைய சிநேகிதர்கள், அவருக்கு பிரியமானவர்கள், எல்லாருக்கும் நம்முடைய வாழ்க்கை ஆசீர்வாதமாக இருக்கும். நம்முடைய வாழ்க்கை கனி தருகிற வாசனை தருகிற வீசுகிற 12 விதமான ஆசீர்வாதங்களை தருகிற வாழ்க்கையாக இருக்கும்.
எப்பொழுது?
என் நேசர் என் தோட்டத்தில் வந்து உலாவும் போது!
எந்தன் மா நேசரே !
என் வாசற் கதவை திறந்தேனே!
உள்ளே வந்து வாசம் செய்யும்!
என் தோட்டத்தை சிங்கார வனமாக மாறச் செய்யும்!