Message Title / செய்தி தலைப்பு: New Life Walk Part – 2 – Newness of Life – In A Christian Home | நவவாழ்வு நடை பாகம் – 2 – கிருஸ்தவ இல்லறத்தில் நவவாழ்வு நடை
Message Date / நாள் : 06 & 07 February 2021 | 06 & 07 பிப்ரவரி 2021 | 21 February 2021 | 21 பிப்ரவரி 2021
Message By / போதகர் : Pr. Robert Simon / முனைவர். இராபர்ட் சைமன்
Tamil Message – Part 1:
Bilingual Message – Part 1:
Message Abstract:
நவ வாழ்வு நடையிலே நமது நடை எப்படி இருக்க வேண்டும்? கிறிஸ்து நடந்தது போல் நாமும் நடக்க வேண்டும். அவர் நடந்தபடியே நானும் நடப்பேன் என்று தீர்மானிக்கும் பொழுது என் வாழ்க்கை முறை புதிதாக ஆகிறது நான் புதிதாக ஜீவன் உள்ளவனாய் நடக்கிறேன்.
நாம் மறுபிறப்பு அடைந்து ஞானஸ்நானம் எடுத்திருக்கிறோம்.
ரோமர் 6 : 4 ல் பார்க்கிறோம். கிறிஸ்துவோடு கூட நாம் ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டதால் புதிதான ஜீவனிலே நாம் நடக்க வேண்டும். அந்த நோக்கத்தோடு தான் நாம் ஞானஸ்நானம் எடுத்துக் கொள்ளுகிறோம். அந்த புதிதான ஜீவன் உள்ளவர்களால் நாம் எப்படி நடக்க வேண்டும்?
அந்த புதிதான ஜீவன், நமது ஆத்துமாவை அது புதுப்பிக்கிறது நம்முடைய சிந்தை புதிதாக்கப்படும்பொழுது நம்முடைய வாழ்க்கை மாறுகிறது. நம்மை குறித்ததான ஒரு பூரண அறிவு அவருக்கு உண்டு. நம்முடைய வாழ்க்கை முறையை குறித்து அவருடைய கையேட்டில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதுதான் கர்த்தருடைய வார்த்தை.
நம்முடைய தனி மனித உறவுகள், என்னுடைய மனைவியோடு கூட என்னுடைய கணவனோடு கூட என்னுடைய பிள்ளைகளோடு கூட நண்பர்களோடு கூட நாம் எப்படி நடக்க வேண்டும்?
கிறிஸ்தவ இல்லறத்தில் நவ வாழ்வு நடை – கிறிஸ்தவ இல்லறத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை குறித்து இந்த செய்தியில் காணலாம். கணவன்- மனைவிதான் குடும்பத்தின் கரு. கிறிஸ்துவுக்குள் எல்லாரும் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கிறோம். பெண்ணானவள் ஒரு ஆணை முழுமையடைய செய்கிறாள். கணவனின் குறையை நிறைவாக்குபவளே மனைவி.
கொலோசெயர் 3 : 18, 19 கூறுகிறது,
18. மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.
19. புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்.
சபையில் கிறிஸ்து தலையாய் இருக்கிறார். பரிசுத்த சபை இல்லாமல் கிறிஸ்துவானவர் நிறைவடைவது இல்லை. இது கிறிஸ்தவ சபை மட்டுமல்ல. கரை, திரை, பழுதற்ற, பரிசுத்தமும், மகிமையுமான பூரணமான சபையாகும். சபை தான் இயேசுவை நிறைவாக்குகிறது. தலையும், சரீரமும் இருந்தால்தான் அது முழுமை அடையும். கிறிஸ்துவுக்குள் இருந்த சிந்தையே நமக்குள்ளும் இருக்கக்கடவது.
கர்த்தருக்கு ஏற்கும்படி மனைவி, கணவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். பெண் ஒரு சிறப்புக் கூறு. அவர் தன்னைத் தானே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து, தேவனுக்கு கீழ்ப்படிந்ததுபோல, மனைவிகளும் தங்கள் சொந்த புருஷனுக்கு கீழ்ப்படிய வேண்டும்.
யாருக்கு நான் கீழ்படிய வேண்டும்?
மற்ற எல்லா காரியங்களிலும், ஒருவர் மேல் ஒருவருக்கு, அதிகாரங்கள் இருக்கலாம். ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கையில், ஆத்து மத்தை குறித்த காரியங்களில், கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் அடிமைகள் அல்ல. வேதத்தின்படி கீழ்படிதல் என்பது அடிமைத்தனத்தை குறிக்காது.
மத்தேயு 9ஆம் அதிகாரம் 16, 17 வசனங்களில் பார்க்கிறோம். புதிய வஸ்திரத்தை பழைய வஸ்த்திரத்தோடு சேர்க்கமாட்டார்கள். அதேபோல் புதிய பழரசத்தை பழைய பாத்திரங்களில் வார்க்க மாட்டார்கள். அதைப்போல ஆணாதிக்கம், மேலானவர்கள், கீழானவர்கள் என்ற பழைய தார்பரியங்களை கிறிஸ்தவத்துக்குள் கொண்டு வரக்கூடாது.
கிறிஸ்தவத்தில் ஆணும் பெண்ணும் சரிசமமாய் உள்ளார்கள். கீழ்ப்படிதல் என்பது அவர்கள் ஆற்ற வேண்டிய வாழ்வின் ஒரு பங்காய் இருக்கிறது. வேத தத்துவங்களின் அடிப்படையில் நமது குடும்பங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். நம்முடைய அஸ்திபாரங்கள் வேத வாக்கியங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
எங்கே சேவல் அமைதியாய் இருந்து, கோழி கூவுகிறதோ அங்கே சாபம் தங்கியிருக்கும்.
கிறிஸ்து இயேசு கீழ்ப்படிந்து போல, நீங்களும் ஆற்ற வேண்டிய பங்கை உங்களது குடும்பங்களில், இல்லங்களில் ஆற்றுங்கள்.
கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்!
Tamil Message – Part 2:
Bilingual (English & Tamil) Message – Part 2:
நாள் : 21 Feburary 2021
தலைப்பு : கிறிஸ்தவ இல்லறத்தில் நவ வாழ்வு நடை – 2
போதகர் : முனைவர் இராபர்ட் சைமன்
கிறிஸ்து நடந்தது போல் நாமும் நடக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவ இல்லறத்தில் நவ வாழ்வு நடையை குறித்து எபிரேயர் மூன்றாம் அதிகாரம் 18 முதல் 21 வசனங்களை நாம் தியானித்து வருகிறோம்.
கொலோசெயர் 3:18,19 கூறுகிறது
18. மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.
19. புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்.
ரோமர் 6:4 ல் கிறிஸ்துவோடு கூட நாம் ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டதால் புதிதான ஜீவனிலே நாம் நடக்க வேண்டும் என்று பார்க்கிறோம். அந்த புதிதான ஜீவன், நமது ஆத்துமாவை அது புதுப்பிக்கிறது.
நம்முடைய தனி மனித உறவுகள், என்னுடைய மனைவியோடு கூட என்னுடைய கணவனோடு கூட என்னுடைய பிள்ளைகளோடு கூட நண்பர்களோடு கூட நாம் எப்படி நடக்க வேண்டும்?
கிறிஸ்தவ இல்லறத்தில் நவ வாழ்வு நடை – கிறிஸ்தவ இல்லறத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை குறித்த இரண்டாம் பாகத்தை இந்த செய்தியில் காணலாம். கணவன்- மனைவிதான் குடும்பத்தின் கரு.
இந்த காலத்தில் ஆண் பெண் அனைவரும் சமம். இது புதிதல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, விவிலியத்தில் இதைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. மற்ற மதங்களில் வர்ணாஸ்ரமம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். இதனடிப்படையில் வேத பகுதிகளையும் தவறாக புரிந்து கொள்கிறோம். நிறத்தினாலே, பாலினத்தினாலே நாம் யாரையும் வேறுபடுத்த முடியவில்லை.
விவிலியத்தில் புத்திமதிகள் மனைவியினிடத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. பாவம் பெண்ணிலிருந்துதான் (ஏவாள்) ஆரம்பிக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படி அல்ல, பிரியமானவர்களே. நீதிமொழிகளில் பார்க்கிறோம். புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள். பொறுப்பு பெண்ணிடதில்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேத படைப்பின் படி பார்க்கும்போது, சிருஷ்டிப்பில், மனைவியானவள் கணவனுக்கு தக்க துணையாக படைக்கப்பட்டிருக்கிறாள்.
யார் உயர்ந்தவர்கள்?
உதவி வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களா? உதவி செய்பவர்களா?
நான் உனக்கு சகாயம் செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். யார் உயர்ந்தவர்? உதவியை நாடும் நாமா? அல்லது நமக்கு சகாயம் செய்யும் கர்த்தரா?
கீழ்ப்படிதல் மனைவியினுடைய பங்காயிருக்கிறது. மேற்படி கீழ்ப்படி, ஒன்றுக்கொன்று குறைவானது இல்லை. கீழ்ப்படி இருந்தால் தான், மேற்படி செல்ல முடியும். இயேசு கிறிஸ்துவும் பிதாவானவர் கூறிய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்தார்.
கிறிஸ்து அன்பு கூர்ந்தது போல கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள். மனைவி தன் கணவனுக்கு தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டும் . இயேசு திருவசனத்தை கொண்டு, சபையை பரிசுத்தப்படுத்தினார். அதுபோல் புருஷர்களும் தங்களுடைய வாயின் வார்த்தைகளை கொண்டு, மனைவியை பரிசுத்தப்படுத்தவேண்டும்.
பரிசுத்தம் என்பது பிரித்தெடுப்பது. கறை, திரை, பிழைகளற்றவர்களாய், மனைவியை கணவன் மாற்றவேண்டும். உன் நேசம் அவள் மேலே பறக்கும் கொடியாய் இருக்குமானால், அது உன்னத பாட்டாய் இருக்கும். இல்லையேல் அது புலம்பல் பாட்டாய் இருக்கும்.
எந்த வீட்டில் மனைவியின் ஆசை, புருஷனை பற்றியிருக்கிறதோ, அந்த வீட்டில் சாபம் தங்கியிருக்கும். கணவன் மனைவியை, மனைவி கணவனை, ஆண்டு கொள்வது சாபமாகும்.
புருஷர்கள் மனைவியை ஆண்டு கொள்ளாதிருக்க வேண்டும். மனைவி, கணவனை நச்சரித்துக் கொண்டே இருந்தால் சிலவேளை அது அவனை கசப்படையச் செய்யும்.
புருஷர்கள் கசப்படைந்தால் தேவ கிருபையை இழந்து விழுந்து விடுவீர்கள். இந்த கசப்பின் மூலமாய் அநேகரை தீட்டுப்படுத்தலாம். அநேகர் தீட்டு படலாம். அந்த கசப்பு, மனைவியை, பிள்ளைகளை, பெற்றோரை என அனைவரையும் தொற்றிக்கொள்ளும். புருஷர்கள் மனைவியோடு இசைந்தி ருக்கவேண்டும். பசை போல ஒட்டி இருத்தல் வேண்டும்.
எலும்புக்கு ஒரு வேலை இருக்கிறது. நரம்பிற்கு ஒரு வேலை இருக்கிறது. தசைக்கு ஒரு வேலை இருக்கிறது. எல்லாம் ஒன்றிணைக்கப்பட்டு இசைந்து இருக்கிறது. கணவனும் மனைவியும் அதுபோல இசைந்து இருக்க வேண்டும்.
யார் யாரோடு இசைந்து இருக்க வேண்டும்?
கணவன் மனைவியோடு இசைந்திருக்கவேண்டும். வேதம் சொல்லுகிறது. மனைவி அவர்களோடு இணைய முடியாது. எனவே நீங்கள் அவளோடு இணைய வேண்டும். எனக்கு என்ன வேண்டும் என்று விரும்புகிறேனோ, மற்றவர்களிடத்தில் எந்த அங்கீகாரத்தை எதிர்பார்க்கி கிறீர்களோ, அதையே எனது மனைவிக்கு நான் செய்ய வேண்டும். மனைவியிடத்தில் அன்பு கூற விரும்புகிறவர்கள், முதலாவது உங்களில் நீங்கள் அன்பு கூற வேண்டும் .
மனைவி தன் புருஷனுக்கு ஆற்ற வேண்டிய இரண்டு காரியங்கள் உண்டு:
- புருஷனுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்.
- புருஷனிடத்தில் மனைவி பயபக்தியாய் இருக்கவேண்டும்.
இந்த செய்தியை கேட்டு புருஷனோடு மனைவியும், மனைவியோடு புருஷனும் இசைந்திருக்க, கர்த்தர் தாமே அருள்புரிவாராக!
ஆமென்!!
Tamil Message – Part 3:
Bilingual Message – Part 3:
நாள் : 28 Feburary 2021 | 28 பிப்ரவரி 2021
தலைப்பு : கிறிஸ்தவ இல்லறத்தில் நவ வாழ்வு நடை – 3
போதகர் : முனைவர் இராபர்ட் சைமன்
1 யோவான் 2:6 ஆம் வசனத்தைப் பார்க்கலாம்.
அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.
கடந்த ஒரு சில வாரங்களாகவே இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் தியானித்து வருகிறோம். கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன் என்று சொல்லுகிறவன் அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்.
உலகத்திலே இருக்கிற ஆரியம், மனுதர்மம் போன்றவைகள் நம்முடைய சிந்தனைகளை கலப்படம் பண்ணி விட்டதால் நமக்கும் அதே சிந்தனைகள் கிறிஸ்தவத்தில் ஊடுருவி இருக்கிறது. ஆனாலும் அது வேதத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வேதத்தில் இதைப் பற்றி கூறப்பட்டுள்ளது. நாம் கர்த்தருடைய வசனத்தை நம்ப வேண்டும். வேதத்திலே, மனைவிகள், புருஷனுக்கு பக்கத் துணையாய் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். புருஷனுடைய தேவையை சந்திக்கக் கூடிய ஒரு துணையாக பெண் படைக்கப்பட்டு இருக்கிறாள். புருஷனை அவள் தான் நிறைவாக்குவாள். மனைவி இல்லாமல் புருஷன் முழுமை அடைவதில்லை.
கொலோசெயர் 3 :18,19 கூறுகிறது
18.மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.
19. புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்.
கிறிஸ்தவத்தில் ஆணும், பெண்ணும் இருவரும் சமம். குடும்பத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் கிடையாது. வேதத்தில் அதிகார அடக்குமுறை காண்பிக்கவில்லை. இயேசு தேவனுக்கு நிகரானவர் என்று பிலிப்பியர் இரண்டாம் அதிகாரத்தில் காண்கிறோம். ஆனாலும் அவர் தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்தார்.
கொலோசெயர் 3 : 20 ,21 கூறுகிறது
20. பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.
21. பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.
அநேக கட்டளைகள், கற்பனைகள் வேதத்தில் உண்டு. பிள்ளைகளே கிறிஸ்துவுக்குள் எல்லா காரியங்களிலும் உங்கள் பெற்றோர்களுக்கு நீங்கள் கீழ்ப்படியுங்கள். இதுதான் வாக்குத்தத்தம் உள்ள முதலாம் கற்பனையாய் இருக்கிறது.
உபாகமம் 5:16 கூறுகிறது
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
உன் தந்தையையும் தாயையும் கனம் பண்ணு என்று கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார். கர்த்தருடைய தெரிவு அல்ல. கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்து இருப்பதற்கு பெற்றோரை கனம்பண்ணு. நம்முடைய பெற்றோரை நாம் தெரிவு செய்ய முடியாது. எங்கே பிறப்போம் என்பதை தெரிவு செய்ய முடியாது.
வார்த்தை நமக்கு பெலனை கொடுக்கும். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. மந்திரம் – மனம் + திறம். தகப்பனுடைய வார்த்தை நம்மை ஜீவிக்க வைக்கும். தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை. கோ + இல். கோ என்றால் தலை, இல் என்றால் இடம். தாயை காட்டிலும் வேறு எந்த தலைமை இடமும் இல்லை. தாயை தவிர வேறு எந்த கோவிலும் இல்லை.
நீதிமொழிகள் 30:17
தகப்பனைப் பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைபண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்.
நாமெல்லோரும் பிள்ளைகள்தான். அனைவரும் புருஷர்களாக மனைவிகளாக இருக்க முடியாது. ஆனால் நாம் எல்லோரும் பிள்ளைகளாய் இருக்கமுடியும்.
தாய் சொல்லும் வார்த்தைகளை அசட்டை செய்யக்கூடாது,
ஏன் நாம் கீழ்ப்படியாமல் போகிறோம்? ஏன் கீழ்படியாமை நமக்குள் ஏற்படுகிறது?. ஏன் உங்களால் கீழ்ப்படிய முடியவில்லை? நமக்குள்ளே உள்ள ஒரு ஆவியினால், நமக்குள்ளே கிரியை செய்கிற ஆகாயத்து அதிகார பிரபுவின் நிமித்தமாய்தான் கீழ்படியாமை நமக்குள் ஏற்படுகிறது. அது தேவ பிள்ளைகளிடத்திலும் காணப்படும். உள்ளுக்குள்ளே கீழ்படியாமை காணப்படுமானால், உங்களது கண்கள் பிடுங்கப்படும்.
நான் கேட்கிறேன்? எனக்கு அன்பான சகோதர! சகோதரிகளே! நீங்கள் நடக்கிற அந்த காலடி தடத்தில், உங்களது பிள்ளைகள் நடக்குமானால், உன்னுடைய பிள்ளை எங்கே போகும்? உன் பிள்ளைகளுடைய சாபத்திற்கு நீ தான் காரணமா? இது ஒரு பெரிய கேள்வி.
பிள்ளைகளே பெற்றோருக்கு கீழ்படியுங்கள், பெற்றோர்களே உங்களுடைய பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருங்கள். மனைவிகளே உங்கள் புருஷர்களிடத்தில் பயபக்தியாய் இருங்கள். ஒட்டுமொத்தமாய் ஒருவரில் ஒருவர் அன்பு கூறுங்கள். ஒருவரை ஒருவர் உபசரியுங்கள். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யுங்கள். ஒருவரை ஒருவர் தாங்கிக் கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். தேவனுடைய நியாயப்பிரமாணத்தை உங்களுடைய வாழ்க்கையில் நிறைவேற்றுங்கள்.
கிறிஸ்தவ இல்லறத்தில் இன்பம் பூரிக்க
இயேசு கிறிஸ்துவின் பாத சுவடுகளை பின்பற்றுவோமா!
<