Message Title / தேவ செய்தி தலைப்பு : There You Be Safe And Secure | நீ அங்கே சுகித்திருப்பாய் | Nee Aange Sugithirupaai
Message Language / தேவ செய்தி மொழி : Tamil | தமிழ்
Message Date / தேவ செய்தி நாள் : 16 May 2021 | 16 மே 2021
Pastor / போதகர் : Pr. Robert Simon / முனைவர் இராபர்ட் சைமன்
There You Be Safe And Secure | நீ அங்கே சுகித்திருப்பாய் | Nee Aange Sugithirupaai | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
நாள் : 16.05.2021
தலைப்பு : நீ அங்கே சுகித்திருப்பாய்!
போதகர் : முனைவர் இராபர்ட் சைமன்
நம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் எல்லோராலும் மிகவும் விரும்பி வாசிக்கக் கூடிய ஒரு வேத பகுதியை குறித்து இன்றைக்கு காணலாம். ஒரு பெரிய கவிஞன் சொல்லுகிறான். இந்த வேத பகுதி வானம்பாடி போன்றது. வானம்பாடி பறவை, பறந்து, பறந்து மேலே சென்று நம்முடைய கண்களுக்கு மறைவாக சென்றாலும், அந்தப் பறவையின் இனிய கீதம் நம்முடைய காதுகளில் இனிமையாக தொனித்துக்கொண்டே இருக்கும். அதே போல ஒருவேளை, இந்த வேத பகுதியை, நாம் வாசித்தாலும், வாசிக்காவிட்டாலும், மனனம் செய்தாலும், செய்யாவிட்டாலும், எப்போதும் இந்த வேதப்பகுதி நமக்குள்ளே தொனித்துக்கொண்டே இருக்கிறது.
சங்கீதம் 23 ஐ குறித்து இன்றைக்கு பார்க்கலாம்.
நீதிமொழிகள் 18: 10 – ம் வசனத்தை பார்க்கலாம்.
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.
நாமெல்லாரும் கர்த்தருடைய இரத்தத்தினாலே கழுவப்பட்டு நீதிமான்களாக்கப்பட்டு இருக்கிறோம். கர்த்தருடைய நாமம் நமக்கு பலத்த துருகம். நீதிமான் அதற்குள் ஓடி சுகமாய் இருப்பான். அது ஒரு உயரமான பலத்த கோபுரம். எபிரேய மொழியில் இதன் பொருள் எந்த தீங்கும் நம்மைத் தொட முடியாது. பிரியமானவர்களே! யாரும் வந்து தொட முடியாத அளவு உயரத்துக்கு நீதிமான் சென்று விடுவான். அவருடைய நாமம் நமக்கு ஒரு வலுவான கோட்டை, கோட்டை மட்டுமல்ல கொத்தளம், கொத்தளம் மட்டுமல்ல, ஒரு உயர்ந்த அடைக்கலம். அதற்குள்ளே நாம் போய் விட்டால் எந்த தீங்கும் நம்மைத் தொட முடியாது.
சங்கீதம் 148:13ஆம் வசனத்தைப் பார்க்கலாம்.
“அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது”.
அவர் தான் இந்த பூமியையும், வானத்தையும் உண்டாக்கினார். அவருடைய நாமம் பூமிக்கும் வானத்திற்கும் மேலானது. கர்த்தருடைய நாமம் நமக்கு பலத்த துருகம். ஏல், ஏலோஹீம், எல்லாமுமாய் இருக்கிற தேவன் தன்னை யாவேயாக வெளிப்படுத்துகிறார். யாவே என்றால் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று பொருள் . ஆபிரகாமின் நாட்களில், நோவாவின் நாட்களில் இருக்கிறவராகவே இருந்த தேவன், இப்போதும் இருக்கிறவராகவே இருக்கிறார். இந்த செய்தியை கேட்கும் பொழுதும் உங்களுக்கு அவர் அதை வெளிப்படுத்துகிறார்.
நான் யார் தெரியுமா?
இருக்கிறவராகவே இருக்கிறேன்
எபிரேய மொழியில் அதை யாவே என்று சொல்லுகிறோம். பின்நாட்களில் அவர்கள் பாபிலோன் சிறையிருப்பிலிருந்து திரும்பின பிறகு, யாவே என்று சொல்வதற்கு பதிலாக, இறைவனுடைய பெயரை உச்சரிக்க வேண்டாம் என்று ஒரு பாபிலோனிய கலாச்சாரத்தில், யெகோவா என்ற ஒரு பெயரை சேர்த்தார்கள். இது உருவாக்கப்பட்ட ஒரு பெயர்.
யார் நம்மை ஆசீர்வதிக்க வேண்டும்?
யெகோவா தேவன் நம்மை ஆசீர்வதிக்க வேண்டும்.
வேதத்திலே 6519 தடவை யாவே என்ற சொல்லை பார்க்கிறோம்.
சங்கீதம் 23 -ல் வரும் யாவேயின் நாம பிரஸ்தாபங்களை குறித்து காணலாம்.
- யாவே ரோயி – யாவே என் மேய்ப்பர்.
- யாவே ஈரே – எனக்காக யாவற்றையும் பார்த்துக் கொள்ளுகிற கர்த்தர்.
- யாவே ஷாலோம் – என் சமாதானமாய் இருக்கிற யாவே.
- யாவே ரப்பா – என்னை சுகமாக்கி, ஆரோக்கியம் வரப்பண்ணி எனக்கு சவுக்கியம் வரப் பண்ணுகிற கர்த்தர்.
- யாவே சிட்க்கேனு – என்னை நீதியின் பாதைகளில் நடத்துபவர்.
- யாவே ஷம்மா – என் கூடவே இருக்கிறவர்.
- யாவே ஹோசேனு – என்னை உருவாக்குகிறவர் – நான் யாராக இருக்க வேண்டுமோ, சுவிசேஷகனாக, ஊழியக்காரனாக, தேசத்தை கலக்குகிறவனாக, என்னை உருவாக்குகிற கர்த்தர்.
- யாவே சபையோத் – யுத்தங்களை நடத்துகிற சேனைகளின் கர்த்தர்.
- யாவே நிசி – உனக்கு ஜெயம் தருகிறவர்.
- யாவே மிகோடிஷுக்கேன் – என்னை தமக்கென்று பிரித்தெடுக்கிறவர்.
சங்கீதம் 23:1, 2 கூறுகிறது
1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.
2. அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.
கர்த்தர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய் விடுகிறார். பெருவெள்ளம் வருகிறது. நான் உயரமான இடத்தில் இருக்கிறேன். அவர் என்னை நல்ல இடத்தில் மேய்ப்பார். எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை கிடைக்கிறது.
சங்கீதம் 23:3, 4 கூறுகிறது
3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
தேவன், நமக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடிய ஒரு சூழ்நிலையில் நம்மை கொண்டு நிறுத்துவார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றுவார். கர்த்தர் என்னுடைய நீதியானவர். தேவன் என்னோடு கூட இருக்கிறார். கருப்பை முதல் கல்லறை செல்லும் வரை அவர் என்னோடு கூட இருக்கிறார்.
சங்கீதம் 23:5, 6 கூறுகிறது
5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.
நம்மை உருவாக்குகிற தேவன் அவர். அவர் நம்மோடு கூட ஒரு சேனாதிபதியாக இருக்கிறார். அவர் என்னுடைய சத்துருக்களுக்கு முன்பாக ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறார்.
சமாதானத்தின் தேவன் என்னை அவருக்கென்று பரிசுத்தப்படுத்தி பிரித்தெடுத்தார். அவர் சேனைகளின் தேவன். அவர் நமக்கு ஜெயம் தருகிற தேவன். கர்த்தரின் நாமம் பலத்த துருகம்: நீதிமான் அதற்குள் ஓடி சுகமாயிருப்பான். நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்.
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!
சங்கீதம் 148 : கடைசி வசனம் இவ்வாறு கூறுகிறது
அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.
அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக தமது ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். நாம் யாவரும் கர்த்தருடைய பரிசுத்தவான்கள். நான் உம்முடைய ஜனம் ஆண்டவரே! இந்த நாட்கள் திண்டாட்டத்தின் நாட்கள் அல்ல, கொண்டாட்டத்தின் நாட்கள். கொண்டாட்டமாக உம்முடைய நாமத்தை நாங்கள் துதிக்கிறோம்.
உம்முடைய அனாதி நோக்கத்தை எங்களில் நிறைவேற்றுகிறீர். எங்களுடைய ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம்முடைய நன்மையும் கிருபையும் உம்முடைய பிள்ளைகளை தொடரும். இந்த உலகத்திலே ஒருவேளை ஓட்டம் முடிந்தாலும் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். ஆமென்!
பரிசுத்தவானாய் வாழ்ந்திடு!
பரமனின் பிள்ளையாய் வாழ்ந்திடு!
கொண்டாட்ட கீதங்கள் பாடிடு!
கோபுரத்தில் சுகமாய் தங்கிடு!