Message Title / தேவ செய்தி தலைப்பு : Yahweh My Elohim! – யாவே என் ஏலோஹீம் | கன்மலையின் மேல் நிறுத்துவார் | Yahweh En Elohim!
Message Date / தேவ செய்தி நாள் : 01 January 2024 | 01 ஜனவரி 2024
Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
Yahweh My Elohim! – யாவே என் ஏலோஹீம் | கன்மலையின் மேல் நிறுத்துவார் | Yahweh En Elohim! | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
கர்த்தர் உங்கள் கால்களை கன்மலையின் மேல் நிறுத்துவார் !
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
இன்றைக்கு ஒரு எபிரேய தலைப்பு – யாவே என் ஏலோஹீம்! யாவே என்றால் இருக்கிறவராகவே இருக்கிறவர் என்று பொருள். ஏலோஹீம் என்றால் எல்லாமே அவர்தான், சர்வ வல்லவர், தேவன் என்று பொருள். என்னுடைய எண்ணம் ஏலோஹீம் என்பது தமிழில் எல்லாம் என்பதற்கு இணையானது. இந்த ஏல் என்பதை அரேபியத்தில் all என்று சொல்லுகிறார்கள். தமிழில் ஆல் என்றால் எல்லாம் என்று பொருள். இந்த ஏல், ஆல், எல்லாம், ஏலோஹீம், எல்லாம் ஒன்றுதான்.
“இருக்கிறவராகவே இருக்கிறவர் என் எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார்”.
யாத்திராகமம் 15:2 – கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;
ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன், அவர்தான் எனக்கும் தேவன். யாவே என் தேவன். அவர் இருக்கிறவராகவே இருக்கிறார்.
சங்கீதம் 31:14 – நானோ கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்.
யாவே நீரே என் தேவன்! யாவே நீரே என் ஏலோஹீம்! யாவேதான் எனக்கு எல்லாமுமாய் இருக்கிறார்.
சங்கீதம் 91:2 – நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பின பிறகு ஆண்டவரின் பெயரை உச்சரிக்கக் கூடாது என்று யாவே என்ற பெயரோடு கூட அடோனாய் என்ற, ஆண்டவர் என்ற சொல்லில் உள்ள உயிர் எழுத்துக்களை சேர்த்து யெகோவா என்று உருவாக்கினார்கள். பின் நாட்களில் சீர்திருத்த சபைகள் யெகோவா என்ற பெயரை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். முதலில் கர்த்தர் என்று சொன்னார்கள். பின்னர் யெகோவா என்ற பெயரை பயன்படுத்தினார்கள். அதன் பின்னர் யாவே என்று பயன்படுத்த ஆரம்பித்தார்கள் .இது இறைவனுடைய நாமம் என் ஏலோஹீம்! யாவே என்ற தேவன் இருக்கிறவராகவே இருக்கிறவர் அவர் எனக்கு எல்லாமுமானவர்.
சங்கீதம் 140:6 நான் கர்த்தரை நோக்கி: நீர் என் யாவே தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்.
நீர் என் யாவே தேவன் – இதை எப்படி சொல்லலாம்?
பெயர் என்பது ஒரு ஆளை சுட்டுவது. நாமம் என்பது அவருடைய குணாதிசயங்களை வெளிப்படுத்துவது. யாவே என்பது அவருடைய நாமம். இருக்கிறவராகவே இருக்கிறவர். அந்த இருக்கிறவராகவே இருக்கிறவர் என்னுடைய தேவன். எனக்கு எல்லாமுமானவர். அதாவது ராபர்ட் எனக்கு போதகர் .அது போலவே யாவே எனக்கு எல்லாமுமானவர். என்னுடைய SUPREMO. என்னுடைய GOD.
ஏசாயா 25:1 கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.
கர்த்தாவே, யாவே எனக்கு எல்லாமுமானவர்.
இந்த யாவேதான் மாம்சத்தில் இயேசுவாக மனிதனாக வெளிப்பட்டார் என்று நாம் பார்க்கிறோம் . இந்த தேவன் யார் என்பதை குறித்து வேதத்தில் 500 ATTRIBUTES இருக்கிறது. இந்த ATTRIBUTES குறித்து மிகவும் சுருக்கமாக சொல்வது என்றால்,
- அவர் சர்வ வல்லவர் (OMNIPOTENT).
- எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கிறார் (OMNIPRESENT) – எல்சடாய்.
- எல்லாம் அறிந்தவர் (OMNICIENT).
அவர்தான் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார் படைப்பாளி இல்லாமல் படைப்பு வந்திருக்காது அவர்தான் எல்லாவற்றையும் படைத்தார். இதுதான் நம்முடைய நம்பிக்கை. கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!
இந்த ஏலோஹீமீனுடைய நாமம் என்ன?
யாவே.
யாத்திராகமம் 3:13 – அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.
யாத்திராகமம் 3:14 – அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
இந்த தேவனுடைய பெரிய ATTRIBUTE என்ன?
இருக்கிறவராகவே இருக்கிறார்
ஆபிரகாம் காலத்தில் எப்படி இருந்தேனோ, ஈசாக்கு காலத்தில் எப்படி இருந்தேனோ, யாக்கோபு காலத்தில் எப்படி இருந்தேனோ , அப்படித்தான் இன்றைக்கும் இருக்கிறேன். அதுதான் என் பெயர் பிரஸ்தாபம் என்றார். இருக்கிறவராகவே இருக்கிறவர் எனக்கு எல்லாமுமாய் இருக்கிறார்.
அவருடைய ATTRIBUTES -ல் சுருக்கமாக ஏழு ATTRIBUTES குறித்து பார்க்கலாம்.
இருக்கிறவராகவே இருக்கிற இந்த தேவன் யார்?
- என்னைக் காண்கிற தேவன் (எல்ரோயி)
ஆதியாகமம் 16:13 அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.
நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். அடைக்கலான் குருவி மேல் கூட அவரது கண் இருக்கிறது. அவர் அறியாமல் ஒன்றும் நடக்காது. அவர் பார்க்கிறார். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருக்கிற பெரிய நம்பிக்கை நான் ஆராதிக்கிற தேவன் என்னை காண்கிற தேவன்.
- கர்த்தர் என் மேல் நினைவாய் இருக்கிறார்
சங்கீதம் 40:17 நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்.
தகப்பனும், தாயும் உங்களை மறந்தாலும் கர்த்தர் உங்களை மறக்க மாட்டார். கர்த்தர் உங்கள் மேல் நினைவாய் இருக்கிறார். அவர் இன்றைக்கு என்னென்ன வாக்குத்தத்தங்களை சொல்லி இருக்கிறாரோ, அந்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதற்கு அவர் உங்கள் மேல் நினைவாய் இருக்கிறார்.
யாத்திராகமம் 2:25 தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்.
தேவன் அன்னாளை நினைத்தருளினார் .பேழைக்குள் இருந்த நோவாவை நினைத்தருளினார். அவர் உங்களை மறப்பதில்லை. உங்களை நினைவு கூறுவார்.
- கர்த்தர் என்னை ஆசீர்வதிக்கிறார்
சங்கீதம் 115 :12 கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் என்னை நினைத்துக் கொண்டே இருக்கிறார். ஏன் அவர் என்னை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும்? அவர் என்னை ஆசீர்வதிக்கவே என்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்.
கர்த்தர் என்னை காண்கிறார். கர்த்தர் என் மேல் நினைவாய் இருக்கிறார். கர்த்தர் என்னை ஆசீர்வதிக்கிறார். இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம்.
- என்னை விசாரிக்கும் தேவன்
சங்கீதம் 65:9 தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர்.
கர்த்தர் என்னை காண்கிறார். கர்த்தர் என்னை நினைக்கிறார். கர்த்தர் என்னை ஆசீர்வதிக்கிறார் என்னை ஆசீர்வதிக்கும் கர்த்தர் என்னை விசாரிக்கிறார். பூமி வறண்டு இருக்கிறது உங்களுடைய .வியாபாரம் வறண்டு இருக்கிறது. கர்த்தர் உங்களை விசாரிக்கிறார். நீர் பாய்ச்சுகிறார். மிகவும் செழிப்பாக்குகிறார்.
சங்கீதம் 65:11 வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் பொழிகிறது.
பாதை எப்படி நெய்யாய் பொழியும்?
நன்றாக விளைந்த கோதுமையை வண்டியில் ஏற்றி செல்லும் பொழுது, அந்த கோதுமை மணிகள் நிலத்தில் பொழிவதை பார்க்கும் பொழுது, என்னுடைய பாதை எல்லாம் நெய்யாய் பொழிவது போல் கற்பனை செய்து கூறுகிறார். கர்த்தர் உங்களை விசாரித்து, வருஷத்தை நன்மையினால் முடிசூட்டி, உங்களுடைய பாதையெல்லாம் நெய்யாய்ப் பொழிய பண்ணுவார். ஆசீர்வாதம் மேலே இருந்து கொட்டும்.
- என் மேல் மனதுருகும் தேவன்
ஏசாயா 54:10 மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
யார் தேவனுடைய பர்வதத்திற்கு போவார்கள்?
அழுகையின் பள்ளத்தாக்கை நீரூற்றாய் மாற்றத் தெரிந்தவர்கள் கர்த்தருடைய பர்வதத்திற்கு போவார்கள். அவருக்கு காத்திருப்பவர்களுக்கு அவர் காத்திருப்பார் நம்மை ஆசீர்வதிப்பதற்க்காக நம்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
அவர் குஷ்டரோகியை பார்த்து மனதுருகுகிறார். நாயினூர் அருகே விதவையை பார்த்து மனதுருகுகிறார். அவருடைய மனம் கல்லாக இல்லை. எப்படி மனதுருகிறார்?
அங்கே பிணம் போகிறது பின்னாலே அம்மா அழுது கொண்டு செல்லுகிறார். அந்த விதவையை பார்த்த உடனே அவருடைய மனம் உருகுகிறது. அந்தப் பாடையைத் தொட்டு வாலிபனே எழுந்திரு என்று சொல்லுகிறார். நாமும் அனேக பிணங்கள் செல்லுவதை பார்ப்போம் ஆனால் நாம் ஒன்றும் மனம் உருகுவதில்லை .
மனதுருக்கம் எப்படி வரும்?
என்னுடைய பாடுகளை, அவர் தன்னுடைய பாடுகளாக நினைக்கும் பொழுது நல்ல மனதுருக்கம் வரும். அந்த மனதுருக்கம். என்னுடைய பிரச்சனையை, என்னுடைய கவலையை அவர் என்னுடைய கண் கொண்டு பார்க்கிறார். இதுவே மனதுருக்கம்.
- எனக்கு சகாயம் பண்ணும் தேவன்
ஏசாயா 41:10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அவர் யாருடைய ஜெய பலனாய் இருக்கிறார்?
யாக்கோபு என்னும் புழுவே, உன்னை புதிதும் கூர்மையுமான பற்களும் உள்ள எந்திரம் ஆக்குவேன் என்றால் மலைகளை மிதித்து நொறுக்குவாய், குன்றுகளை பதருக்கு ஒப்பாக்குவாய் ,அதை முறத்தில் எடுத்து தூற்றுவாய், காற்று அதை பறக்க அடித்துக் கொண்டு போகும் என்று கர்த்தர் சொல்லுகிறார். யுத்தத்தை அதின் வாசல் மட்டும் திருப்புகிறவர்களின் ஜெய பலனாய் அவர் இருக்கிறார் . சத்துருவை விரட்டி அடிக்க அவர் எனக்கு ஜெய பலனாய் இருக்கிறார். அவர் என்னை பலப்படுத்துகிறார். நீர் என் விரல்களை யுத்தத்திற்கு பழக்கினீர் வெண்கல வில்லும் என் கையில் வளையும். என்னை எழும்பி பிரகாசிக்க பண்ணுவார் என் கையில் வெண்கலவில் வளையும்படியாக என் கையை பலப்படுத்துவார்
எதற்காக என்னை பலப்படுத்துகிறார் ?
என்னை தம்மை போல் மாற்றுவதற்காக என்னை பலப்படுத்துகிறார்.
- எந்த சூழலிலும் கைவிடாத தேவன்
ஆதியாகமம் 28:15 நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.
நான் உனக்கு சொன்னதை செய்யும் அளவும் உன்னை கை விடுவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் இந்த தேவன் யார்? எந்த சூழ்நிலையிலும் என்னை கரம் பிடித்தவர், கைவிடமாட்டார். கடும் புயல்வரினும் புயல் காற்று வீசினும் அவர் என்னை கைவிடமாட்டார்.
இந்த தேவன் எனக்கு யார்?
இந்த தேவன் சதாகாலங்களிலும் என்னுடைய தேவன் மரண பரியந்தம் என்னை காத்துக் கொள்வார். அந்தம் என்றால் கடைசி வரை அவர் என்னை காத்துக் கொள்வார். இந்த தேவன் எனக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமுமானவர்.
யாவே என் ஏலோஹீம்! இருக்கிறவராகவே இருக்கிறவர்! எனக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார்.
இந்த தேவன் எனக்கு யார்?
- என்னைக் காண்கிற தேவன்
- என்னை நினைத்தருளுகிற தேவன்
- என்னை ஆசீர்வதிக்கிற தேவன்
- என்னை விசாரிக்கிற தேவன்
- என் மேல் மனதுருகிற தேவன்
- எனக்கு சகாயம் பண்ணும் தேவன்
- எந்த சூழலிலும் கைவிடாத தேவன்
யாவே என் ஏலோஹீம்! இந்த யாவே தேவன் எனக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமுமானவர். இந்த சிந்தனையோடு கூட இந்த புதிய ஆண்டை நாம் துவக்குவோம்.!
கர்த்தர் இந்த புதிய ஆண்டில் உங்கள் கால்களை கன்மலையின் மேல் நிறுத்துவார் ! ஆமென்!