The RIGHTEOUS, The WICKED | நீதிமான் துன்மார்கன் | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

Message Title / தேவ செய்தி தலைப்பு : The RIGHTEOUS, The WICKED | நீதிமான் துன்மார்கன்

 

Message Language / தேவ செய்தி : Tamil | தமிழ்

 

Message Date / தேவ செய்தி நாள் : TO BE UPDATED

 

Pastor / போதகர் : Pr. Robert Simon / முனைவர். இராபர்ட் சைமன்

 

Bilingual Message : English & Tamil

 

 

The RIGHTEOUS, The WICKED | நீதிமான் துன்மார்கன் | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

 

நாள் : 28.03.2021.
தலைப்பு : நீதிமான் துன்மார்க்கன்
போதகர் : முனைவர் இராபர்ட் சைமன்.

ஒரு சங்கீதத்தை நான் திரும்பத், திரும்ப வாசித்துக் கொண்டிருந்தபோது, நீதிமான் என்ற வார்த்தை, திரும்பத் திரும்ப வந்ததை கவனித்தேன். இந்த நீதிமானுக்கு உரிய குணநலன்களையும், ஆசீர்வாதங்களையும் குறித்து, தியானிக்கலானேன். நம்முடைய சுய நீதியினால் யாருமே நீதிமானாக முடியாது. ஆனால் வேதத்தில் சிலரை நீதிமான் என்று கூறப்பட்டுள்ளது.

நீதிமான் யார்?

எப்படி வாழ வேண்டுமோ, அப்படி வாழ்கிறவன் நீதிமான் என்று வேத வல்லுநர்கள் அழைக்கின்றார்கள்.

சங்கீதம் 112 ஆறாம் வசனம் இவ்வாறு கூறுகிறது
“அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்”.

நீதிமான் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான். நீதிமானுடைய 12 குணாதிசயங்களை பற்றியும் 12 ஆசீர்வாதங்களை குறித்தும் காணலாம். சங்கீதம் 112 ஆம் அதிகாரத்தில் இருந்து இந்த காரியங்களை குறித்து தியானிக்கலாம்.

நீதிமான் எனப்படுபவன் யார்? நீதிமானுடைய குணாதிசயங்கள் என்ன?
நீதிமானுடைய 12 குணாதிசயங்கள்

  • கர்த்தருடைய காரியங்களில் பயப்படுகிறவன்
  • நீதிமான் கர்த்தருடைய கட்டளைகளில் பிரியமாயிருக்கிறான்
  • நீதிமான் உத்தமன்
  • நீதிமான் கிருபை உள்ளவன்
  • நீதிமான் மனதுருக்கம் உள்ளவன்
  • நீதிமான் நீதியுள்ளவன்
  • நீதிமான் தயவுள்ளவன்
  • நீதிமான் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பவன்
  • நீதிமான் தன்னுடைய காரியங்களில் நியாயமாய் நடப்பான்
  • துர்செய்தியை கேட்டதினால் பயப்படாதவன் நீதிமான்
  • வாரியிறைப்பவன் நீதிமான்
  • ஏழைகளுக்கு கொடுப்பவன் நீதிமான்

மனுஷருக்கு பயப்படுகிற பயம் கண்ணியை வருவிக்கும் நாம் கர்த்தருக்கு பயப்பட வேண்டும் . கர்த்தருக்கு பயப்படுகிற பயமே ஞானத்தின் ஆரம்பம். கர்த்தருடைய கட்டளைகள் நீதிமானுக்கு பாரமாக தோன்றவில்லை. நீதிமான் உத்தமனாவான். இந்தப் பக்கம் அந்தப் பக்கம் சாயாமல் எந்தப் ஆரவாரமும் இல்லாமல் நிற்பான்.

நீதிமான் கிருபை பொருந்தியவனாவான். கிருபை என்பது ஒரு அழகு . நீதிமான் மனதுருக்கம் உள்ளவன். மற்றவர்களுடைய துக்கத்தை அவர்களுடைய கண்பார்வையில் பார்ப்பதே மனதுருக்கம் ஆகும்.

நீதிமான் தேவனோடு சரி நிலையில் இருக்கிறான். எது கர்த்தருக்கு சரியோ அது எனக்கும் சரி. எது கர்த்தருக்கு தவறோ அது எனக்கும் தவறு. நீதிமான் தயவுள்ளவன். தயவு என்றால் நன்மை செய்யக் கூடிய விருப்பம் என்று பொருள். ஏதாவது ஒரு நன்மை செய்யக்கூடிய விருப்பம் அவனிடத்தில் காணப்படும்.

உங்களுடைய பங்களிப்பு என்ன?

நீதிமான் மற்றவர்களுக்கு துணை நிற்பவன். நீதிமான் தேவையில் உள்ளோருக்கு தன்னுடைய ஆசீர்வாதத்தை பகிர்ந்து கொள்கிறான். தன்னுடைய காரியங்களில் நியாயமாய் நடப்பவன் நீதிமான். துர்செய்தியை கேட்டதினால் பயப்படாதவன் நீதிமான். நீதிமான் ஏழைகளுக்கு கொடுத்தான். எவ்வளவாய் விதைக்கிறோமோ, அவ்வளவாய் அறுக்கிறோம். கர்த்தர் ஆசீர்வதிக்கும் போது அதற்கு எல்லை இல்லை.

அள்ளித் தூவுங்கள். நீதியின் விதியை அறிந்து கொள்ளுங்கள். அப்பொழுது நீதியின் விளைச்சலை நாம் பெற்றுக் கொள்ளலாம். நீதிமான் ஏழைகளுக்கு கொடுக்கிறான். ஏழை என்றால் தேவை உள்ளவர்கள் . ஏழைகளுக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். அவர், அதை அவனுக்கு திரும்ப கொடுப்பார் என்று வேதம் கூறுகிறது. அப்பொழுது உன் களஞ்சியங்கள் நிரம்பி வழியும்.

நீதிமான் – வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.

நான் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ வேண்டும். என்னுடைய குடும்பத்திற்கு, சமுதாயத்திற்கு, நல்ல பங்களிப்பினை நான் செலுத்த வேண்டும்.

இப்படிப்பட்ட குணநலன்களை கொண்ட நீதிமான்களுக்கு கர்த்தர் அருளும் ஆசீர்வாதங்கள் என்ன?

காத்திருந்து பெற்றுக்கொள்வோமா!
அடுத்த வார தொடர்ச்சியில்…..

 

The RIGHTEOUS, The WICKED Part 2 | நீதிமான், துன்மார்கன் பாகம் 2:

Tamil Message | தமிழ் தேவ செய்தி

Bilingual Message | தமிழ் மற்றும் ஆங்கில தேவ செய்தி:

நாள் : 04.04.2021
தலைப்பு : நீதிமான் துன்மார்க்கன் –பாகம் 2
போதகர் : முனைவர் இராபர்ட் சைமன்.

சங்கீதம் 112 :6 ம் வசனம் இவ்வாறு கூறுகிறது,
“அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்”.

நீதிமான் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான். கடந்த வார செய்தியில் நீதிமானின் குணநலன்களை குறித்து தியானித்தோம். நீதிமானுடைய 12 ஆசீர்வாதங்களை குறித்து சங்கீதம் 112 ஆம் அதிகாரத்தில் இருந்து காணலாம்.

நீதிமான் யார்?

எப்படி வாழ வேண்டுமோ, அப்படி வாழ்கிறவன் நீதிமான் என்று வேத வல்லுநர்கள் அழைக்கின்றார்கள்.

நீதிமானுடைய 12 ஆசீர்வாதங்கள்

ஆசீர்வாதம் 1 : நீதிமான்கள் பாக்கியவான்களாய் இருப்பார்கள்
பாக்கியம் என்றால் என்ன?
நம்மைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு நமது வாழ்க்கை இருப்பதே பாக்கியமாகும். மற்றவர்கள் நம்மைப் பார்த்து பரிதவிப்பது அல்ல. கர்த்தருடைய கட்டளைகளை கைக்கொள்ளும் பொழுது நாம் பாக்கியவான்களாய் இருப்போம்.

ஆசீர்வாதங்கள் 2 & 3 : அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும்
செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்

யூத கலாச்சாரத்தில் எப்பொழுதெல்லாம் தங்களுடைய ஆசீர்வாதத்தை நாடுகிறார்களோ, அப்போதெல்லாம் தங்களது பிள்ளைகளுக்காகவும் வேண்டிக் கொள்வார்கள். அவர்கள் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

யாத்திராகமம் 20:6 கூறுகிறது
“என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்”.

நம்முடைய பிள்ளைகள் நிச்சயமாகவே ஆசீர்வதிக்கப்படுவார்கள். அவர்கள் பூமியில் மாத்திரமல்ல. உங்களது பிள்ளைகள் பரலோகத்திலும் பலத்திருப்பார்கள். நீதிமான்களாய் இருக்கும்போது, உங்களுக்குள் வம்சங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.

ஆசீர்வாதங்கள் 4, 5 & 6 : ஆஸ்தியும், ஐஸ்வர்யமும் அவன் வீட்டிலிருக்கும்
அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்

சங்கீதம் 112 :3
“ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்”.

நாம் எல்லா வளமுடனும் இருப்பது தான் நமது சொத்து. நம்முடைய ஆரம்பம் அற்பமாய் இருந்தாலும், முடிவு சம்பூரணமாய் இருக்கும். நமது வீட்டில் இருக்கும் ஆஸ்தியும் ஐஸ்வர்யமும் இருக்கும் . செழிப்பின் உபதேசம் என்று தனியான ஒரு உபதேசம் இல்லை. தேவன் நமது செழிப்பை விரும்புகிறார். நமக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது.

அவருடைய நீதி என்றென்றைக்கும் இருக்கும். உங்களுடைய வாழ்க்கையிலே நீங்கள் தேவனுக்கு முன்பாக நீதியாய் செய்த சரியான காரியங்கள் எப்பொழுதும் நினைவுகூரப்படும்.

ஆசீர்வாதம் 7: நீதிமானின் இருளை கர்த்தர் வெளிச்சமாக்குவார்

சங்கீதம் 112 : 4
“செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனஉருக்கமும் நீதியுமுள்ளவன்”.

நீதிமான்கள் அறியாத வழியிலே கர்த்தர் அவர்களை வழிநடத்துவார். கோணலானவைகளைச் செவ்வையாக்குவார். அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமாக்குவார். நாம் குருடராய் இருக்கிறோம். வெளிச்சம் வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும். கர்த்தரை சார்ந்திருப்பதே உனது வெளிச்சம்.

ஆசீர்வாதம் 8: நீதிமான் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்


சங்கீதம் 112 : 6
“அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்;…

சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும் நீதிமான் அசைக்கப்படுவதில்லை. நீதிமான் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.

ஆசீர்வாதம் 9: நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.

நீதிமானுடைய புகழ்ச்சி நித்திய நித்திய காலம் இருக்கும்.

ஆசீர்வாதம் 10: துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் நீதிமான் பயப்படமாட்டான்

சங்கீதம் 112:7 “துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்”.

கர்த்தரிடத்தில் விசுவாசமாய் இருப்பதினால் நீதிமான் எதற்கும் அசையாமல் திடனாய் இருப்பான்.

ஆசீர்வாதம் 11: நீதிமான் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்


சங்கீதம் 112:8
“அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்”.

நீதிமான் தன் சத்துருக்களை காணும் போது கூட மனரம்மியமாய் இருப்பான். ஒரு எதிரான சூழ்நிலையை பார்த்தாலும் கூட மனம் பதபதைக்க மாட்டான்.

ஆசீர்வாதம் 12: அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்


சங்கீதம் 112:9

“வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்”.
கிறிஸ்துவினுடைய வாழ்க்கை முறையை நாம் தரித்துக் கொள்ள விரும்பினால் நம்முடைய கொம்பு மகிமையால் உயர்த்தப்படும்.

சங்கீதம் 75:10
“துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்”.

நாம் தேவனுக்கு முன்பாக நீதிமான்களாய் இருக்கும்போது பாக்கியவான்களாய் இருப்போம். நம்முடைய பிள்ளைகள் பாக்கியவான்களாய் இருப்பார்கள். நம்முடைய வம்சம் ஆசீர்வதிக்கப்படும். தேவனுக்கு முன்பாக நீதிமானாய் இருக்கும்பொழுது பொல்லாங்கான காரியங்கள் ஒன்றாகிலும் நம்மை அசைக்காது. நமது வீட்டில் ஐஸ்வர்யம் இருக்கும். நம்முடைய கொம்பு மகிமையால் உயர்த்தப்படும்.

நாமும் நீதிமானாய் வாழ்ந்து
தேவ மகிமைக்கு நம்மை ஒப்புக் கொடுப்போமா!!!

Share with